அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்பின் தலை­மையில்  நேற்று முன்­தினம்  புதன்­கி­ழமை வெள்ளை மாளி­கையில்  ரமழான்  நோன்பு கால இப்தார் மாலை விருந்­தோம்பல் நிகழ்வு இடம்­பெற்­றது.

டொனால்ட் ட்ரம்ப்பின் தலை­மையில்  இப்தார் நிகழ்வு வெள்ளை மாளி­கையில்  இடம்­பெ­று­வது இதுவே முதல் தட­வை­யாகும்.

கடந்த வருடம்  அவர் இந்த இப்தார் நிகழ்வை நடத்­து­வதை வாபஸ் பெற்­றி­ருந்த நிலையில் இந்த வருடம் அந்­நி­கழ்வை நடத்த முன் வந்­தி­ருந்­தமை  அமெ­ரிக்கா வாழ் முஸ்லிம் மக்கள் சமூ­கத்­தினர் மத்­தியில் வியப்பைத் தோற்­று­வித்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

இந்­நி­கழ்வில் உரை­யாற்­றிய  டொனால்ட் ட்ரம்ப், உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டி­லு­முள்ள முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ரையும் அங்­கீ­க­ரித்து  ஐக்­கி­யத்­துக்­கான  செய்­தி­யொன்றை  முன்­வைத்தார்.

"நாம் இன்­றைய மாலை வேளையில் உலகின் மாபெரும் மதங்­களில் ஒன்றின் புனித பாரம்­ப­ரி­யத்தைக்  கௌர­வப்­ப­டுத்த ஒன்­று­கூ­டி­யுள்ளோம்"  என  அவர் கூறினார்.

மேற்­படி  நிகழ்வில்  முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த உறுப்­பி­னர்கள், அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்கள் மற்றும் சவூதி அரேபியா,  குவைத்,  ஜோர்தான்   மற்றும் ஐக்­கிய அரபு இராஜ்­ஜியம்  உட்­பட   முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட நாடு­களைச் சேர்ந்த தூது­வர்கள் உள்­ள­டங்­க­லானோர்  கலந்துகொண்­டமை  குறிப்­பி­டத்­தக்­கது.

டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிர­சார கால­கட்­டத்தில் அமெ­ரிக்­கா­வுக்குள் முஸ்­லிம்கள் பிர­வே­சிப்­ப­தற்கு முழு­மை­யான தடை விதிக்­கப்­பட வேண்டும் என அழைப்பு விடுத்­தி­ருந்தார்.  இதன்­போது போரால் பாதிக்­கப்­பட்டு   தாய்­நாட்­டி­லி­ருந்து வெளி­யேறி வரும் சிரிய பிர­ஜை­களை  உயி­ரா­பத்து விளை­விக்கக் கூடிய பாம்பொன்று எனக் குறிப்­பிட்ட  அவர்,  இஸ்லாம் அமெ­ரிக்­கர்­களை வெறுப்­ப­தாக தான் கரு­து­வ­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் அவர்  வெளி­நாட்­டிலும் உள்நாட்­டிலும்  வாழும் முஸ்­லிம்­களை  அங்­கீ­க­ரித்து ஐக்­கி­யத்­திற்கு வலி­யு­றுத்­தி­யமை   பல­ரையும் வியப்பில் விழி உயர்த்த வைத்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

மத்­தி­ய­கி­ழக்கு எங்­கி­லு­முள்ள பெறு­ம­தி­மிக்க பங்­கா­ளர்­க­ளு­ட­னான அமெ­ரிக்­காவின்  நட்­பு­றவு மற்றும் ஒத்­து­ழைப்­புக்­கான  புதுப்­பிக்­கப்­பட்ட பிணைப்­புகள் என்­பன குறித்து ட்ரம்ப் இதன்­போது விப­ரித்தார்.

"இப்தார் நிகழ்­வா­னது  குடும்­பங்­க­ளையும்  நண்­பர்­க­ளையும்  ஒன்­றி­ணைத்து  சமா­தானம், தெளிவு மற்றும் அன்­புக்­கான  காலத்தால் வரை­ய­றுக்­கப்­ப­டாத உன்­னத செய்­தியை  கொண்­டா­டு­வ­தா­க­வுள்­ளது"  என அவர் கூறினார். 

"நாம் அனை­வரும்  இணைந்து பணி­யாற்­று­வதன் மூலமே  எம் அனை­வ­ருக்­கு­மான எதிர்கால  பாது­காப்பு மற்றும் சுபீட்­சத்தை  அடைய முடியும்"  என  ட்ரம்ப் மேலும் தெரி­வித்தார்.

முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட சில நாடு­க­ளுக்கு எதி­ராக ட்ரம்பால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள  பயணத் தடை குறித்து  உச்ச நீதி­மன்றம் தீர்ப்­ப­ளிக்­க­வுள்ள நிலை­யி­லேயே  இந்த இப்தார் நிகழ்வு இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.  அந்தத் தீர்ப்பு  இந்த மாதம்  வழங்­கப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் அமெ­ரிக்­கா­வி­லுள்ள  அநேக முஸ்லிம்  குடி­யியல் உரிமைக் குழுக் கள்  டொனால்ட் ட்ரம்பின் இந்த இப்தார் நிகழ்வை பகிஷ்கரிப்பு செய்து  வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள பூங்காவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

ட்ரம்பின் சினமூட்டும் கருத்துகள்  அமெ ரிக்க முஸ்லிம்கள்  ஒடுக்கப்படுவதற்கும் பார பட்சத்திற்குள்ளாக்கப்படுவதற்கும் வழி வகை செய்வனவாக உள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.