தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்ட சதி என்றும், இதற்கு சி. பி. ஐ. விசாரணை தேவை என்றும் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மேலும் தெரிவித்ததாவது, 

‘தூத்துக்குடியில் போராட்டக்காரர்களை குறிவைத்து சுட்டது திட்டமிட்ட சதி. முதல்வர், டி.ஜி.பி. மாவட்ட அதிகாரிகள், துப்பாக்கி சூட்டிற்கு துணை போய் உள்ளனர். கண்துடைப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள  விசாரணை ஆணையத்தால் எந்த பயனும் இல்லை. 

குறித்த விசாரணை ஆணையமே போலி ஆணையம். இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு சி. பி. ஐ. விசாரணை நடத்தவேண்டும்.

குறித்த  விசாரணை ஆணையத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக பேரவையில் பேசுவதற்கு அனுமதியளித்துவிட்டு பிறகு பேச அனுமதிக்காமல் தடுத்துவிட்டனர். 

துப்பாக்கி சூடு குறித்து பேரவையில் பேசக்கூடாது என்று நாங்கள் ஏன் சபைக்கு வரவேண்டும்? என்று கேள்வி எழுப்பினார் ஸ்டாலின்.

மேலும் இது தொடர்பாக ஸ்டாலின் தன்னுடைய முக நூல் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது,

இன்று தமிழக சட்டபேரவையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் நிகழ்ந்திருக்கும் மர்மத்தைப் பற்றி சபையில் பேச வாய்ப்பளிக்காத காரணத்தாலும், மிக முக்கியமான இந்த பிரச்சினையை பேச விடாமல் தடுத்த காரணத்தாலும் ஜனநாயகத்தை பாதுகாக்கவேண்டும் என்ற அடிப்படையில் தி.மு.க. சார்பில் இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மக்களுடைய பேரணியை கண்காணிக்கவேண்டும் என்ற அடிப்படையில் தூத்துக்குடி ஆட்சியர் பிரசாத் உத்தரவு பிறபித்துள்ளார். 

அது என்னவெனில், மக்கள் அங்கு நடத்திய பேரணிக்கு முதல் நாளே சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலையிலே ஒன்பது நிர்வாகத்துறையினுடைய நடுவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

ஆனால் துப்பாக்கி சூடு நடந்த பகுதிகளில் அப்படி நியமிக்கப்பட்டவர்கள் அந்த பேரணி நடைபெற்ற தினத்தில் பொறுப்பில் இருக்கவில்லை.

ஆள்மாறாட்டம் செய்து வேறு அதிகாரிகளை அந்த இடத்திற்கு அழைத்து துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்திருக்கிறார்கள். ஆகவே 13 பேர் துப்பாக்கி சூடு நடத்தி கொல்லப்பட்டதற்கும் போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்களை அடையாளம் கண்டு குறி வைத்து சுட்டதும் திட்டமிட்ட சதி.

தனியார் நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ் நாட்டினுடைய முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி, அதே போல் டி. ஜி. பி. யாக இருக்ககூடிய ராஜேந்திரன் அந்த மாவட்டத்தில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் எல்லாம் இந்த துப்பாக்கி சூட்டிற்கு எந்த அளவிற்கு துணை போய் இருக்கிறார்கள். எந்த அளவிற்கு சதி திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

ஆகவே இது குறித்து ஒரு கண்துடைப்புக்காக நியமிக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த விசாரணை ஆணையம் நிச்சயமாக பயனளிக்கப்போவதில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. 

எனவே இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும் என்கின்ற பிரச்சினையை சட்டபேரவையில் நேரமில்லா நேரத்தை பயன்படுத்தி நான் எழுப்புவதற்கு முயற்சித்தேன். ஆனால் அதற்கு அனுமதியளிக்கவில்லை. 

ஆகவே இந்த கமிஷனே ஒரு போலி கமிஷன் இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் உடனே சி. பி. ஐ. விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.’ என்று பதிவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது,

‘துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நீதிபதி விசாரணை, நீதிமன்ற விசாரணை குறித்து சட்டபேரவையில் பேசுவது மரபல்ல. துப்பாக்கி சூடு குறித்து ஏதேனும் இருந்தால் விசாரணை கமிஷனில் ஒப்படைக்கலாம்.’ என்று பதிலளித்திருக்கிறார்.