இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

விபத்தை ஏற்படுத்தியமை, குடிபோதையில் வாகனத்தை செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதத்தையேற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அமைச்சரின் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சரின் மகன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார செலுத்திய கெப் வண்டி விபத்துக்குள்ளாகிய நிலையில், யசோத ரங்கே பண்டார உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்திருந்தனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் வண்டி சம்பவதினம் அதிகாலை 12.45 அளவில் புத்தளம் ஆராச்சிக்கட்டுப் பகுதியி்ல் மதிலொன்றை உடைத்துக் கொண்டு வீடொன்றுக்குள் சென்று விபத்துக்குள்ளாகியது.

விபத்து இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சரின் மகன் மதுபோதையில் இருந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் தற்போது பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.