(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பியரின் விலை குறைப்பானது இந் நாட்டில் இளம் வயதுடையோரை மது பாவனையில் ஈடுபட வழிகாட்டியுள்ளதுடன், அது செறிவு கூடிய மதுவகைகளை நோக்கிய பயணத்திற்கான உந்து சக்தியாக அமையும் வாய்ப்புள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பாடசாலை மாணவர்களை வெகுவாக இலக்கு வைத்து பல்வேறு வகையிலான போதைப் பொருட்கள் பாடசாலைகளை அண்டியப் பகுதிகளிலேயே விற்பனை செய்யப்படும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

கடந்த வருடத்தில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் 29,790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 39 வீதமானவர்கள் 20 வயதினை அண்டியவர்களாகவே காணப்படுகின்றனர். 60 வீதமானவர்கள் 30 வயதினைத் தாண்டியவர்கள் எனத் தெரிய வருகின்றது.

பியரின் விலையைக் குறைத்து, ஏனைய செறிவு கூடிய மது வகைகளின் விலையை அதிகரிப்பானது, மது பாவனையாளர்களை சட்டவிரோத மது பாவனையை நோக்கி நகர்த்துவதாகவே இருக்கின்றது. இதனால், ஏற்கனவே 6 – 7 வீதமான அளவில் இருந்துள்ள சட்டவிரோத மது பாவனையாளர்களது எண்ணிக்கை இன்னும் சில காலங்களில் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. 

எனவே இந்த நாட்டினை போதையற்ற நாடாக மாற்ற வேண்டுமெனில் சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற நிறுவனங்கள் தொடர்பில் இறுக்கமான ஏற்பாடுகள் இருத்தல் அவசியமாகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.