சீனாவில் பணியாற்றும் அமெரிக்க இராஜாதந்திரிகள் மர்மநோயொன்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் கியுபாவில் பணியாற்றிய அமெரிக்க இராஜதந்திரிகளை பாதித்த நோய் போன்ற ஒன்றினால் சீனாவில் பணியாற்றும் அமெரிக்க இராஜதந்திரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் தென்பகுதி நகரமொன்றில் பணியாற்றும் அமெரிக்க இராஜதந்திர பணியாளர் ஒருவர் மர்ம நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளது உறுதியானதை தொடர்ந்து ஏனைய பணியாளர்களையும் அவரது குடும்பத்தவர்களையும் மருத்து பரிசோதனை செய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமெரி;க்கா சீனாவிற்கு அனுப்பிவைத்துள்ளது.

குறிப்பிட்ட குழுவினர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பலர் முழுமையான மருத்துபரிசோதனைக்காக சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பபட்டுள்ளனர்.

சீனாவில் பாதிக்கப்பட்ட இரு அமெரிக்கர்கள் மீண்டும் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் கியுபாவில் பணியாற்றிய 24 அமெரிக்க இராஜதந்திர பணியாளர்கள் மர்ம நோயினால் பாதிக்கப்பட்டமை அமெரிக்க கியுபா உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

கியுபாவில் பணியாற்றிய இராஜதந்திரிகள் தங்கள் செவிப்புலனை இழந்தனர் சிலர் மூளையில் பாதிப்பையும் எதிர்கொண்டனர்.