யுத்தம் காரணமாக தற்போது வடக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். யுத்தத்தினை மேற்கொண்ட அரசாங்கம் மாற்றுத்திறனாளின் நலன், உரிமைகள் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும் இல்லையேல் காலப்போக்கில் இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கென கொள்கை வரைவு தயாரிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை விட  மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம் உள்ளது. யுத்தம் விளைவுகளிலிருந்து மீள் எழ முடியாதவாறு  அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.  

பல மாணவர்கள், பெண்கள் இன்று தம் உடல்களில் செல் துண்டுகளை சுமந்த வண்ணம் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். இது பிற்காலங்களில் பல பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

வடக்கிற்கு அரசாங்கம் தனித்துவமான திட்டங்கள் வகுக்காமை வேதனையளிக்கிறது. ஏனைய மாகாணங்களுடன் இவர்களது பிரச்சினையை ஒப்பிட முடியாது. காரணம் யுத்தத்தினால் வட மாகாணத்தில் உள்ளவர்களே அதிகளவாக பாதிப்படைந்துள்ளனர். 

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகூட குறிப்பிட்ட சிலருக்கே வழங்கப்படுகிறது. அது அவர்களின் அன்றாட வாழ்க்கையின் செலவுக்கே போதாமல் உள்ளது. 

எனவே அரசாங்கம் நிலைமாறுநீதி என்றெல்லாம் கவர்ச்சிகரமாக பேசுவதை விடுத்து மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க  திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.