(எம். எம். மின்ஹாஜ், ஆர்.யசி)

மத்திய வங்கி பிணைமுறி ஊழலுடன் தொடர்புபட்ட நிறுவனங்களில் இருந்து பணமோ காசோலைகளோ பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளனர்.

பொய்யான காரணிகளை கூறி விசாரணைகளை குழப்ப வேண்டாம் என சபாநாயகர் கரு ஜெயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மறைக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படும் சீ அறிக்கையின் முழுமையான பக்கங்களை உடனடியாக எனக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி செயலாளருக்கு விடுத்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகர் அறிவிப்பு நேரத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களிடம் பணம் பெற்றதாக பாராளுமன்ற  உறுப்பினர்கள் 118 பேர் உள்ளனர் எனவும், 166 பாராளுமன்ற உறுப்பினர்கள் காசோலை பெற்றதாகவும் கூறப்பட்டுள்ள காரணிகளை அடுத்து பாராளுமன்றத்தில் சகல உறுப்பினர்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த காரணிகள் குறித்து சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் நான் காரணிகளை கோரினேன். எனினும் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக 118 பேரின் பெயரோ அல்லது காசோலை பெற்றுக்கொண்டதாக 166 பேரின் பெயர்களோ சீ அறிக்கையில் இல்லை என அறிவித்துள்ளனர். 

ஆகவே தற்போது விவாதிக்கப்படும் சீ அறிக்கைகையின் முழுமையான பக்கங்களை உடனடியாக எனக்கு தரக்கோரி நான் ஜனாதிபதி செயலாளருக்கு அறிவித்துள்ளேன். அவர் தற்போது வெளிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர் நாடு திரும்பியவுடன் அறிக்கையை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.

அறிக்கையை மறைக்கவோ அல்லது பக்கங்களை எமக்கு வழங்காது மறைக்க அவர்க்கு அவசியம் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். எவ்வாறு  இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக் கொண்டனர் என்பது அறிக்கையில் உள்ளடக்கப்படாத காரணியாகும்.

அதேபோல் இதனுடன் தொடர்புபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பொலிஸார் 25 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டது என கூறுவதும் முற்றிலும் பொய்யான காரணியாகும். அவ்வாறு எவர் மீதும் விசாரணைகளை நடத்தப்படவில்லை என எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது, 

அம்பாறையில் ஹோட்டல் ஒன்றில் கருத்தடை மாத்திரை கலந்து உணவுகள் வழங்கப்படுவதாக பொய்யான காரணிகளை கூறி இந்த நாட்டில் பாரிய இன முரண்பாடுகளை ஏற்படுத்தியதின் மூலமாக நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டன, எனினும் இப்போது அவை பொய்யான காரணிகள் என வெளிவந்துள்ளது.

அதேபோன்று தான் இந்த காரணியும் உள்ளது. மத்திய வங்கி ஊழல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் எமக்கு தெரிவித்துள்ளது. ஆகவே இவ்வாறான ஒரு நிலையில் அனைவரும் புத்திசாலித்தனமாகவும், தெளிவுடனும் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.