(இரோஷா வேலு)

சிலாபம் பிரதேசத்தில் வைத்து ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டவரை விடுவிக்க கோரி பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் உட்பட ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து சிலாபம் பொலிஸார் மேலும் தெரிவித்தாவது, 

சிலாபம் - விலத்தல பிரதேசத்தில் வைத்து நேற்றுமுன்தினம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து 3 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த வேளையில், பிறிதொரு நபர் அவரை விடுவிக்க கோரி பொலிஸ் அதிகாரிகளுக்கு 50,000 ரூபா இலஞ்ச வழங்க பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். 

இதன்போது, 50,000 ரூபா இலஞ்சப்பணத்துடன் குறித்த இலஞ்சம் வழங்க முற்பட்ட சந்தேகநபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

இச்சம்பவத்தில் ஹெரோயினுடன் இஹலகடிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரும், இலஞ்சம் வழங்க முற்பட்ட இஹலகடிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய இரண்டு ஆண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரையும் நேற்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.