இராஜதுரை ஹஷான்)

தேசிய அரசாங்கத்தின் 100நாள் வேலைதிட்டத்திற்கும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மக்களின் நலன் கருதியே சிறப்பு துறை சார் அரச கட்சி சார்பற்ற நிபுணர்கள் 100நாள் வேலைத்திட்டத்தினை தயாரித்தனர் என தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன100நாள் செயற்திட்டம் தோல்வியடைந்த திட்டம்  என்று குறிப்பிட முடியாது அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் ஆரம்பிக்கப்பட்டதாகவே உள்ளது. அவை  இன்று முழுமை  பெறாமைக்கு ஒரு தரப்பிணரை மாத்திரம் குறை கூற முடியாது  அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

தேசிய அரசாங்கம் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த 100 நாள் வேளைத்திட்டம் முக்கிய அங்கம் வகித்திருந்தது. ஆனால் அதுவே இன்று சர்ச்சைக்குரிய விடயமாக காணப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள்  ஒரு தூர நோக்கு கொள்கைளாக மக்கள் மத்தியில் பிரசுரிக்கப்பட்டது. மக்களுக்கு இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் முழுமையடையவில்லை என்று தற்போது குறை கூறுகின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கும் 100 நாள் செயற்திட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள கூடியதாகவே காணப்படுகின்றது. அரசாங்கத்தின் மீது தற்போது மக்கள் கொண்டுள்ள விரக்தியினை ஒரு தரப்பிணர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவர்களை அரசாங்கத்திற்கு எதிராக திசைதிருப்பி விடுகின்றனர். மக்களும் யதார்த்தங்களை மாத்திரம் கருத்திற் கொண்டு  தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது குறுகிய காலக்கட்டத்தில் பல தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைமை காணப்பட்டது. ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தி நல்லாட்சியினை ஸ்தாபிப்பதே எமது  நோக்கமாக காணப்பட்டது. ஆகவே 100 நாள் வேலை திட்டங்களை தனி நபர் தனது  விருப்பத்திற்கு தயாரிக்கவில்லை. மக்களின் நலன் கருதியே உருவாக்கப்பட்டது.

100நாள் வேலை திட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் இன்று பல நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகுதியாகவுள்ள விடயங்களினை முழுமைப்படுத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது  . அரசாங்கத்தின் திட்டங்களை மேற்கொள்ளும் போது கடந்த மூன்று வருட காலமாக பல எதிர்ப்புக்கள் ஏற்பட்டது. அதன் காரணமாகவே தாமதங்கள் ஏற்பட்டது. ஆகவே  இதற்கு ஒரு தரப்பிணரை மாத்திரம் குறை கூற முடியாது தேசிய அரசாங்கத்தில்  அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்தார்.