(இரோஷா வேலு) 

போலியான கடனட்டைகளை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த நைஜீரிய பிரஜையொருவரை நேற்று கைதுசெய்துள்ளதாக காலி துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுகொட பிரதேசத்தில் வைத்து நபரொருவர் தாக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், தக்குதலுக்குட்பட்ட நைஜீரிய பிரஜையொருவரையும் சில இளைஞர்களையும் விசாரித்துள்ளனர்.

இதன்போது, குறித்த நைஜீரிய பிரஜை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நாட்டுக்குள் வந்துள்ள நிலையில், மீண்டும் நாட்டை விட்டு திரும்பாமல் நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் விசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார். 

மேலும் சந்தேகநபரை கைதுசெய்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த நபர் இலங்கைக்கு வந்த ஆரம்பத்தில் இலங்கை இளைஞரொருவருடன் நட்புடன் பழகி அவரது வங்கி அட்டையை திருடி போலியான அட்டையொன்றை தயாரித்து, அதனைக்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது. 

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை இன்று காலி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்ததோடு, வங்கி அட்டை திருட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள சந்தேகநபரை சி.ஐ.டி.யில் ஒப்படைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.