(நா.தினுஷா)

எனக்கும் பிணைமுறிவிவகாரத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அர்ஜுன் அலோசியஸை நான் சந்தித்ததும் இல்லை. அவரிடமிருந்து தேர்தலுக்கு பணம் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

கொழும்பு புத்தசாசன அமைச்சில் இன்று நடைபெற்ற உலக வனவிலங்கு தொடர்பான மாநாட்டினை இலங்கையில் நடத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில். 

தற்போது அமைச்சரவையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் பெற்றதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. 118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புபட்டுள்ளதற்கான அறிக்கை நேற்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. 

ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த நபரிடம் பணம் பெற்றிருக்கலாம். ஆனால் அவரிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதற்கான அவசியம் எனக்கு இல்லை. பிணைமுறிவிவகாரத்துடன் தொடர்புபட்டதாக குறிப்பிடப்டும் அர்ஜுன் அலோசியஸை நான் சந்தித்ததும் இல்லை.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலின்போது தேவையான பணத்தினை எனக்கு அறிமுகமாகியவர்களிடம் இருந்து பெற்று கொண்டேனே தவிர அர்ஜுன் அலோசியசிடமிருந்து பெறவில்லை.

மக்களின் விருப்பினை பெற்று ஆட்சிக்கு வந்த அமைச்சர்கள் அனைவரும் பாரிய பொறுப்பினை கொண்டவர்கள். இவ்வாறான பொறுப்பில் உள்ளவர்கள் தவறிழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

எனவே பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புபட்டவர்கள எவறாக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.