உங்கள் யாவ­ரையும் வர­வேற்­பதில் பெரு­ம­கிழ்ச்சி அடை­கின்றேன். தமிழ் மக்கள் பேரவை அர­சியல் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் இயக்கம். தமிழ் மக்கள் பேரவை, கட்சி அர­சி­யலில் ஈடு­ப­டாது தமிழ் மக்­களின் விடிவு ஒன்­றையே குறிக்­கோ­ளாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

அந்த வகை­யிலே தமிழ்ச் சமு­தாயம் அறிவு பெற வேண்டும், ஆற்றல் பெற வேண்டும், ஆத­ரவு பெற வேண்டும், தமிழ்ச் சமுதாயத்திற்கு அதன் சகல மட்­டங்­க­ளிலும் இருந்து அனு­ச­ரணை கிட்ட வேண்டும் என்ற ரீதியில் இளை­யோரைப் பலம் மிக்­க­வர்­க­ளாக ஆக்க இவ்­வா­றான ஒரு இளையோர் மாநாட்டை வெகு­வி­ரைவில் கூட்ட உள்ளோம். 

அந்த மா­நாட்டில் எமது இளைய சமு­தா­யத்­துடன் சேர்ந்து சில முக்கியமான விட­யங்­களைக் கலந்­தா­லோ­சிக்க உள்ளோம். போருக்குப் பின்­ன­ரான எமது சமு­தாயம் எதிர்­நோக்கும் பிரச்சினை­களை, குறிப்­பாக இளைஞர், யுவ­திகள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை முதலில் இனங்கண்டு அதன்பின் அவற்றைத் தீர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்­பதை அவர்களுடன் கலந்­தா­லோ­சிக்க உள்ளோம். இது சம்­பந்­த­மாக அர­சியல் ரீதி­யாக சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு ஏற்றவகையில் எமது உரிமைகளை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்­பதை ஆராய இருக்­கின்றோம். 

அடுத்து எமது சமு­தாயம் நிலை­த­டு­மாறி, தவறி, பிறழ்­வாக நடக்க எத்தனிக்கும் போது நாம் எவ்­வாறு அவர்­களைத் திரும்­பவும் ஒழுக்க விழு­மி­யங்கள் நிறைந்த ஒரு கட்­டுக்­கோப்­புக்குள் கொண்­டு­வ­ரலாம் என்று அவர்­க­ளுடன் கலந்­து­ரை­யாட இருக்­கின்றோம். 

மூன்­றா­வ­தாக எமது தற்­போ­தைய அர­சியல் கலா­சா­ரத்தை சீர­மைப்­பது எவ்­வாறு என்று பேச இருக்­கின்றோம். 

நான்­கா­வ­தாக இளைஞர் யுவ­தி­களை எல்லாத் துறை­க­ளிலும் வலுப்படுத்தல் எவ்­வாறு என்று ஆராய இருக்­கின்றோம். அரசியல் ஞானம் பெற்று தற்­போ­தைய அர­சியல் கலா­சா­ரத்தை மாற்றி அமைத்து எவ்­வாறு எமது இனம் முன்னேற்றம் காண வேண்டும் என்று கலந்துடையட இருக்­கின்றோம். 

இது சம்­பந்­த­மாக நாங்கள் போருக்குப் பின்னர் எடுத்துக் கொண்ட அரசியல் நகர்­வுகள் பற்றி ஆராய இருக்­கின்றோம். தமிழ் மக்­களின் நீண்ட கால அபி­லாஷைகளை பூர்த்தி செய்­யக்­கூடிய விதத்தில் எமது அர­சியல் நகர்­வுகள் இருந்துள்ளனவா என்று ஆராய இருக்­கின்றோம். எமது இளைஞர், யுவ­திகள் அடுத்த தலை­முறைத் தலை­வர்கள் என்ற விதத்தில் அவர்­க­ளுக்குப் போது­மான அர­சியல் அறிவு, நிர்­வாகச் செயல்­திறன், நிதி முகா­மைத்­துவம் பற்றி போதிய அறிவை அவர்கள் பெற நாங்கள் இதுவரையில் நட­வ­டிக்­கைகள் எடுத்­தோமா என்று ஆராய இருக்கின்றோம்.

அவ்­வா­றான வழி­மு­றைகள், பொறி­மு­றைகள் தயா­ரிக்­காதபடி­யால்தான் தமிழ் மக்கள் பேர­வையை உண்­டாக்க வேண்­டிய கட்­டாயம் எமக்கு ஏற்பட்டது என்று எமது இளைஞர் சமு­தா­யத்­திற்கு தெளிவு­ப­டுத்த உள்ளோம். 

எம்மை பொறுத்த வரையில் தமிழ் மக்­களின் அர­சியல் என்­பது பின்னரும் விடயப் பரப்­புக்­களை கொண்­டி­ருக்­க­வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்பு. 

ஒன்று எமது நோக்­கு­களும் அபி­லாஷைகளும் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அவற்றில் எமக்கு நம்­பிக்கை இருக்க வேண்டும். நம்­பிக்கை உண்­டாக்­கப்­பட வேண்டும். தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் எமது அபிலாஷை­களை உள்­ள­டக்­கி­விட்டு அவை ஏட்­டுச்­சு­ரக்காய் சமைக்க உத­வாது என்ற கருத்தைக் கொண்­டி­ருந்­தோ­மானால் எம் மக்­களின் விடிவுக்கு நாம் வழி அமைக்க மாட்டோம். அவர்­களின் நிரந்­தர விலங்­கு­க­ளுக்கே வழி அமைப்போம். 

அடுத்து அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட எமது அபி­லாஷை­களை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்­பது பரி­சீ­லிக்­கப்­பட வேண்டும். பெரும்­பான்­மை­யினர் வலு­வுற்­ற­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு எதி­ராகப் போராட முடி­யாது. ஏதோ கிடைப்­பதை சற்று வலு­வாக்கி எடுத்துச் செல்வோம் என்று எமது அர­சியல் தலை­வர்கள் நினைத்­தி­ருந்தால் அவ்­வா­றான சிந்­த­னைகள் சரியா தவறா என்­பது பற்றி ஆராய இருக்­கின்றோம். 

மூன்­றா­வ­தாக எமது அர­சியல் கலா­சாரம் ஒரு நேர்­மை­யான அர­சியல் கலா­சா­ர­மாக மாற்­ற­ம­டைய என்ன செய்ய வேண்டும் என்று ஆராய இருக்­கின்றோம்.

நான்­கா­வ­தாக எமது இளைஞர், யுவ­திகள் இந்த அர­சியல் பவ­னியில் ஒன்­றி­ணைய எதைச் செய்ய வேண்டும் என்­பதை ஆராய இருக்­கின்றோம். நேர்­மை­யான அர­சி­ய­லொன்றை எடுத்துச் செல்­வ­தானால் நாம் எவ்­வாறு நடந்து கொள்ள வேண்டும் என்­பதைப் பற்­றியும் எமது சமு­தா­யத்தில் ஒட்­டிக்­கொண்­டி­ருக்கும் சில தீய பழக்­கங்­களை நாம் கைவிட என்ன செய்ய வேண்டும் என்­பதைப் பற்­றியும் சிந்­திக்க இருக்­கின்றோம். 

அடுத்து கல்வி மேம்­பாட்டை ஏற்­ப­டுத்த எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கைகள் எமது ஆராய்ச்­சிக்கு உட்­படும். அடுத்து எமது சமு­தாயம் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்­பதை ஆராய இருக்­கின்றோம். அடுத்து சமூகப் பிறழ்­வு­களை எவ்­வாறு ஒன்­று­பட்டு களைய முடியும் என்­பதை ஆராய்வோம். 

எமது இளைஞர் மா­நாட்டில் எமது வட­கிழக்கு மாகா­ணங்­களில் மாவட்­டங்கள், பிர­தே­சங்கள் தோறும் இளைஞர் அணி­களை உரு­வாக்­கு­வது பற்றி ஆராய இருக்­கின்றோம். அடுத்து அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட மக்கள் பிரச்சினை­களை இந்த இளைஞர் அணிகள் எவ்­வாறு தீர்க்­கலாம் என்­பது பற்றி கலந்­து­ற­வாட இருக்­கின்றோம். எமது இளைஞர் யுவ­திகள் தலை­மைத்­துவப் பண்­பு­களை வளர்த்­தெ­டுக்க வேண்டும் என்­பதே எமது கரி­சனை. 

அர­சியல், பொரு­ளா­தாரம், சமூக முன்­னேற்றம் ஆகி­ய­வற்றில் ஒரு மறு­ம­லர்ச்­சியை கொண்­டு­வந்து இளைஞர், யுவ­தி­களை அந்த மறு­ம­லர்ச்­சிக்­கான மையங்­க­ளாக மாற்ற ஆன­வற்றைச் செய்ய விரும்­பு­கின்றோம். ஆகவே போருக்­குப்­பின்­ன­ரான எமது தமிழ் மக்­களின் பிரச்­சினை­களை ஆராய்தல், இளைஞர் யுவ­தி­களின் நடை­மு­றைப்­பி­ரச்சினை­களை ஆராய்தல், தற்போதைய அர­சியல், சமூக, பொரு­ளா­தார நிலையை ஆராய்தல், ஆராய்ந்து அடை­யாளம் காணப்­படும் பிரச்சினை­களை எவ்­வாறு தீர்த்தல், நீண்ட காலத்­திட்­டங்­களை இதற்­காக வகுத்தல், எமது இளைஞர் யுவ­திகள் விழிப்­போடு நடந்­து­கொள்ள வழி­மு­றை­களை ஆராய்ந்து பகிர்ந்து கொள்ளல், தமிழர்தம் விழுமியங்களையும் பாரம்பரியங்களையும் எமது இளைய சமுதாயத்தின் மனதில் உறைய வைத்தல் போன்ற பலவும் எம்மால் பரிசீலிக்கப்படும். அந்த வகையில் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற முறையில் நீங்கள் மக்களுக்கும் எமது இளைய சமுதாயத்திற்கும் எமது கருத்துக்களை முதலிலே கொண்டு செல்லும் எமது ஊடகப் பார்த்தசாரதிகளாகப் பணிபுரியப் போகின்றீர்கள் என்று சொல்லி வைக்கின்றேன். இனி உங்களின் கேள்விகளைக் கேட்கலாம்.