(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகராக போட்டியிட்ட சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தோல்வியடையவில்லை, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெண் பிரதிநிதியே இன்று தோற்க்கடிக்கப்பட்டுள்ளார் என சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். 

 

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர் தரப்பில் பரிந்துரைக்கப்பட்ட சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே 53 வாக்குகளை பெற்ற போதிலும் 97 வாக்குகளை பெற்ற ஆனந்த குமாரசிறி பிரதி சபாநாயகராக தெரிவானார். 

இதன் பின்னர் சபையில் அவர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

பிரதி சபாநாயகராக என்னை தெரிவு செய்ய ஆதரவாக கருத்து தெரிவித்த நபர்கள் அனைவருக்கும், என்னை பரிந்துரைத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சுயாதீனக் குழுவினர் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், அதேபோல் என்னை தெரிவு செய்ய வேண்டும் என சபையில் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் பிரதி சபாநாயகர் ஒருவராக தெரிவு செய்யப்பட பெண் ஒருவர் போட்டியிட்டதே பாரிய வெற்றியாக கருத வேண்டும். 

எனினும் இன்று  சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே என்ற பாராளுமன்ற உறுப்பினர் தோல்வியடையவில்லை. மாறாக  பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து பேசும் பாராளுமன்றத்தில் தேர்தலில் போட்டியிட்ட ஒரு பெண் பிரதிநிதியே தோற்கடிக்கப்பட்டுள்ளார் என்றார்.