(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடுவதை தடுப்பதற்காகவே  முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவிற்கு  கட்சி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்.

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தற்போது பிளவுப்பட்ட நிலையிலே காணப்படுகின்றது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னர் தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களும்  ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்கட்சி ஆசனத்திலிருந்து கொண்டு செயற்படுகின்றனர்.

மறுபுறம் சு.க.வில் தற்போதுள்ள உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கமாக தொடர்ந்து செயற்பட தீர்மானித்துள்ளனர். இவ்வாறு ஒரு கட்சியின் உறுப்பினர்கள் இரண்டு வேறுப்பட்ட விதமாக கட்சியின் கொள்கைகளுக்க எதிராக செயற்படுவது கட்சியினை பலவீனப்படுத்துவதாகவே காணப்படும்.

தற்போது கட்சியில் மிகுதியாக உள்ள சில உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி பொதுஜன பெரமுனவிற்கு வரவும் தீர்மானித்துள்ளனர்.

ஆகவே இவ்வாறு இடம்பெற்றால் சு.க. பாரிய பிளவினை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே இதனை தடுக்கவே கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையில் மஹிந்தவுக்கு கட்சி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்.