(இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பேர்ப்பெச்சுவல் ட்ரசரிஸ்  நிறுவனத்தின் நிதியினை ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பறிமாற்ற வேண்டும் என தெரிவித்த பேராசிரியர் ஜி. எல்.பீறிஸ்  தேசிய அரசாங்கம் பிணைமுறி  மோசடிக்கு ஒரு போதும் நிரந்தர தீர்வினை மேற்கொள்ளாது குற்றவாளிகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றதென தெரிவித்தார்.

வஜிராஷ்ரம விகாரையில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் .

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடியுடன் தொடர்புப்பட்டவர்கள் யார் யார் என்ற விடயம்  தற்போது புரியாத புதிராகவே காணப்படுகின்றது . 118 பேர் அர்ஜுன் அலோஸியசிடமிருந்து பணம் பெற்றுள்ளதாக வெளியிடப்பட்ட தகவல்களை தொடர்ந்து  தற்போது மக்கள் மத்தியில் அனைத்து அரசியல்வாதிகளும் நம்பிக்கையற்றவர்களாகவே காணப்படுகின்றனர். அரசாங்கம் 118 பேர்களின் முழுமையான விபரங்களை அறிவிக்காமல் மக்களின் அரசியல் சிந்தனைகளை திசைதிருப்பி விடுகின்றது.

அரசாங்கம் வெகு விரைவில் குறித்த மோசடியுடன் தொடர்புப்பட்டவர்களை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். இவ்விடயம் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் இழுக்கினை ஏற்படுத்தும் செயலல்ல  சபாநாயகர் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்தி மோசடிக்கு துணைபோனவர்களின் விபரங்களை  வெளிப்படுத்த வேண்டும்.

அரசாங்கம் பிணைமுறி விவகாரம் தொடர்பில் இதுவரை காலமும் மந்தகரமாகவே செயற்பட்டு வருகின்றது .  மோசடியில் ஈடுப்பட்டுள்ளவர்கள் விசாரணை குழுக்களில் உறுப்பினர்களாக  காணப்படும் போது விசாரணைகள் மந்தகரமாகவே இடம் பெறும்  பர்பசுவல்ட்ரவரீஸ் நிறுவனம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் கோப் குழுவினர் பொறுப்பற்ற விதமாகவே அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்பட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிணைமுறி விவகாரம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் ஒரு போதும் தேசிய அரசாங்கம் நிறைவேற்றாது.  முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை அரசாங்கம் ஒரு போதும் நாட்டுக்கு மீளழைத்து வராது. முழுமையான அரசாங்க மாற்றத்தின் பின்னரே  இவற்றிற்கு முழுமையான தீர்வுகாண முடியும்.

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு மேலதிக சலுகைகளை வழங்க வேண்டும் என்று அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றது. அரசாங்கத்தின் நோக்கத்திற்கமைய ஒரு அமைச்சருக்கு மாதமொன்றுக்கு மேலதிக சலுகைகளுக்காக 7 இலட்சம் ஒதுக்கப்பட வேண்டும்.

தேசிய அரசாங்கத்தில்  அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் அனைவரும் மக்களின் பிரதிநிதிகள் மக்கள் தற்போது பாரிய வாழ்க்கை செலவுகளை எதிர்கொண்டுள்ள நிலையில்  அரசாங்கத்தின் குறித்த யோசனை மக்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும். எனவே அரசாங்கம் மக்களின் வாழ்க்கை செலவுகளை குறித்து கவனம் செலுத்துவதை விடுத்து அமைச்சர்களை  தன்பக்கம்  சேர்த்துக் கொள்ள சூழ்ச்சிகளை பிரயோகித்து வருகின்றது என தெரிவித்தார்.