(இராஜதுரை ஹஷான்)

இலங்கை - சிங்கப்பூர் நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மலைநாட்டு ஒப்பந்தத்தினை விட பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என  பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

 

வஜிராம விகாரையில் பொது எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிங்கப்பூருடன் மேற்கொள்ளவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும்  அறியாத விடயமாகவே காணப்படுகின்றது. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அசல் பத்திரங்கள் தொடர்புப்பட்ட தரப்பினரால் இதுவரை காலமும் சமர்ப்பிக்கப்படவில்லை. கூட்டு எதிரணியினரது முயற்சிகளினால் இந்த உடன்படிக்கையின் மூல பிரதிகள் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாட்டுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தினை  உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்று கடந்த காலங்களாக மருத்துவ சங்கத்தினரும் நிதிபதிகளின் சங்கத்தினரும் மற்றும் தொழிற்துறை வல்லுனர்கள் உட்பட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். 

ஆனால் அரசாங்கம் இவ்விடயங்களை கருத்திற் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டது.

ஒரு நாடு பிறிதொரு நாட்டுடன் உடன்படிக்கையினை மேற்கொள்ளும் போது இரண்டு தரப்பினருக்கும் அந்த உடன்படிக்கையின் மூலம் நன்மைகளே தோற்றம் பெற வேண்டும்.  அத்துடன் குறித்த உடன்படிக்கையானது அந்நாட்டு மக்களிடம் வரவேற்கத்தக்கதாக காணப்பட வேண்டும். 

இதுவே சர்வதேச உடன்படிக்கைகளின் சாதாரண நியதியாக காணப்படுகின்றது. ஆனால் இந்த உடன்படிக்கை சர்வதேச நியதிகளுக்கு முரணாகவே காணப்படுகின்றது. மக்கள் அனைவரும் தற்போது  சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பினையே தெரிவித்து வருகின்றனர்.

மேலும் குறித்த உடன்படிக்கை தொடர்பில்  அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும்  சர்வதேச வர்த்தக அமைச்சு  மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் அதனை தவிர்த்து தமது விருப்பத்தின் பேரில் உடன்படிக்கைகளை செயற்படுத்த வேண்டும் ஏனெனில் இதன் விளைவுகளை நாட்டு மக்களே எதிர்கொள்ள வேண்டும்.

ஆகவே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினால் தேசிய உற்பத்தி முற்றாக அழிவடைந்துவிடும் என்றார்.