மட்டக்களப்பு, பெரியபுல்லுமலைப் பகுதியில் குடிநீர் தொழிற்சாலை அமைப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறுக் கோரி பிரதேச மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரியபுல்லுமலை பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் குடிநீர் தொழிற்சாலை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

எமது பகுதி மக்கள் குடிப்பதற்கே நீர் இல்லாமல் அல்லோப்படும் இவ்வேளையில் மழை நீர் மூலம் குளங்களில் சேமிக்கப்பட்டுள்ள நீர்,  நிலக்கீழ் நீர் மற்றும் நீர்ப்பாசனத் திட்டம் மூலம் வழங்கப்படும் நீரைப் பயன்படுத்தி இதுபோன்ற தொழிற்சாலை செயற்படுமாயின் மக்கள் குடிப்பதற்கு நீர் இன்றி பலதரப்பட்ட நோய்களுக்கும் இன்னல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அது மாத்திரமல்லாமல் இப் பகுதி மக்கள் விவசாயத்தினை ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வருபவர்கள். குளத்தில் தேங்கியுள்ள நீரையோ அல்லது நிலக்கீழ் நீரையோ இத்தொழிற்சாலை பயன்படுத்துமாயின் விவசாய நடவடிக்கையும் கேள்விக்குறியாகும்.

அத்துடன் இத்தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் இரசாயணக் கழிவுகள் மூலம் சுற்றாடல் ரீதியாக பாரிய விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன.

எனவே இந்த தொழிற்சாலை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் உடன் நிறுத்த உரிய அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.