நாட்டின் விவசாயத்துறையினை நவீனமயப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் 81 கோடி ரூபாய் செலவில் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையின் விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் ‘ஈகோரிஸ்’ என்ற நிறுவனத்தால் செயற்படுத்தப்படுகிறது.

விவசாயத்துறை மேம்பாட்டுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக இலங்கையின் விவசாயத்தினை சிறந்த பயன் தரக்கூடிய வகையிலும் வெவ்வேறு காலநிலைகளுக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய சந்தையை இலக்கு வைத்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் கிராமிய அபிவிருத்திகாக ஐரோப்பிய ஒன்றியம்  முன்னெடுக்கும் விரிவான வேலைத்திட்டத்தின் ஒரு பகுதிக்காக இந்த நிதியுதவி நாட்டிற்குக் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நல்ல பிரதிபலன் பெற்றுக்கொடுப்பதே தமது பிரதான நோக்கம் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ள இந்த வேலைத்திட்டத்துக்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, விவசாய ஆரம்ப கைத்தொழில் அமைச்சு மற்றும் இன்னும் பல  தரப்பினரையும் இணைத்துக்கொண்டே ஐரோப்பிய சங்கம் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கிறது.