(எம்.சி.நஜிமுதீன்)

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்குதாரராவார். ஆகவே அவரால் பொறுப்புக்கூறலிலிருந்து விடுபட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகயவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. ஏனெனில் அரசாங்கத்தின் முறையற்ற நடவடிக்கைகளை மூடிமறைப்பதற்காகவே இவ்வாறு சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. 

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட விடயங்கள், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பிரதமர் நியமனம், அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட விடயங்களை அவரே தற்போது விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். எனினும் அவரின் தேர்தல் விஞ்ஞாபனமாகவே நூறு நாள் வேலைத்திட்டம் இருந்தது. 

அத்துடன் சோபித தேரர் மத்திய வங்கியில் மோசடி செய்யுமாறு கேட்டுக்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டு, அம்மோசடியின் குற்றச்சாட்டை பிரதமர் மீது சுமத்தியுள்ளார். எனினும் மத்திய வங்கி மோசடியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்குதாரர். அப்பொறுப்புக்கூறலிலிருந்து அவரால் விடுபட முடியாது. ஏனெனில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்திருக்காவிடத்து மத்திய வங்கியில் இரண்டாவது முறை மோசடி இடம்பெற்றிருக்காது. அதற்கு அவர் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும்.

ஆகவே ஜனாதிபதியாலும் பிரதமராலும் ஒன்றிணைந்து மக்களுக்கு நல்லது செய்யும் வகையில் இந்த அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாது. எனவே  உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.