(நா.தினுஷா)

அரசாங்கம் நவீனத்துவமிக்கதாகவும் ஜனநாயக தன்மைமிக்கதாவும் இருந்தால் மாத்திரமே நாட்டின் பொருளதார வளர்ச்சியின் உறுதிதன்மையினை பேணி பொருளாதாரத்தில் வளர்ச்சிகர நாடாக இலங்கை அடையாளம் காணப்படும்  என மாநகர மற்றும்  மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கையை விட பொருளாதார வளர்ச்சியில் ஏனைய நாடுகள் முன்னிலையில் உள்ளன. ஆனால் இலங்கை இதுவரையில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக கருதபடுகின்றது. 1998 ஆம் ஆண்டு இலங்கை மத்தியத்தர நாடுகளில் ஒன்றாக அடையாளபடுத்தபட்டிருந்த போதிலும் பல போராட்டங்களின் மத்தியில் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்து வருகின்றது. 

19 ஆம் நுற்றாண்டிலிருந்து உலகநாடுகள் அனைத்துறைகளிலும் வளர்ச்சியினை கண்டுவருகின்றன. வளர்ச்சியடைந்துவரும் உலக நாடுகளிடையே தொழில்நுட்ப வளர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ததாகும். 

இவ்வாறானதொரு நிலையில் எதிர்கால முன்னேற்றங்களுக்கு எமது சமூகத்தில் பொருளியலாளர்கள், வைத்தியர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கபடவேண்டும். இதற்கென மாநகர மற்றும்  மேல்மாகாண அபிவிருத்தி  அமைச்சு புதிய தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கியுள்ளது.

அரச நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றியமைக்க வேண்டுமானால் நவீனத்துவமான ஆட்சியொன்றினை நாட்டில் ஏற்படுத்த வேண்டும். அதன்மூலமே பொருளாதாரத்தில் முன்னேற்றத்தில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க முடியும் என்றார்.