
அப்புத்தளை, தொட்டுலாகலை பகுதியில் உள்ளக விமான நிலையம் ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார்.
700 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவிருக்கும் விமான நிலையத்திற்கான காணியினை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் இதற்கான சாத்திய வள அறிக்கையினை மேற்கொள்ள சிவில் விமான சேவைகள் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இது போன்று பல்வேறு பிரதேசங்களில் மூன்று உள்ளக விமான நிலையங்களை அமைக்க உத்தேசித்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். எல்ல, பண்டாரவளை, நுவரெலியா, பதுளை, தியத்தலாவை போன்ற பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளை இலக்கு வைத்து இங்கு விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 1.2 கி.மீற்றர் நீளமும் 75 மீற்றர் அகலமும் கொண்டதாக விமான ஓடு பாதை அமைக்கப்படவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பிரதான வீதிகளினூடாக செல்வதை விட குறைந்த நேரத்தில் இலகு ரக விமானங்கள் மூலம் விரைவாக பயணங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.