தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டதையடுத்து அவரது இறுதி கிரிகைகள் இன்று இடம்பெற்றன.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மாதம் 22 ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர்.

குறித்த கலவரத்தில் பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் 6 பேரின் உடல்களை அவர்களது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மாணவி ஸ்னோலின் உடலை பெற உறவினர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர்.

அவர்களிடம் மாவட்ட நிர்வாகம் சார்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னர் மாணவி ஸ்னோலின் உடலை பெற அவர்களது உறவினர்கள் சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து ஸ்னோலினின் தாய் வனிதாவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அவரது இறுதி கிரிகைகள் இன்று இடம்பெற்றன.

இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் 6 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு பின்னர் குறித்த 6 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.