(எம்.சி.நஜிமுதீன்)

மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகியுள்ளதாக் குறிப்பிட்ட அக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் விகிதாசார முறையில் மாகாண சபையைத் தேர்தலை நடத்துவது குறித்தே தமது கட்சி அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பலபிட்டிய பிரதேசத்தில் நேற்று  நடைபெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், 

புதிய தேர்தல் முறையில் சிக்கல் இருப்பதாக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் துறைசார் நிபுனர்களும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. எனவே புதிய தேர்தல் முறையில் பிரச்சினை இருக்குமாயின் விகிதாசார முறையில் தேர்தலை நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

புதிய தேர்தல் முறையூடாக வெற்றியீட்டிய கட்சிகளினால் கூட சுயதீனமாக ஆட்சியமைக்க முடியாமை உள்ளிட்ட பல்வேறு சிக்கல் நிலை உள்ளது. எனவே அது தொடர்பில் தேவையான திருத்தங்கள் முன்வைக்கும் வரையில் தேர்தலை விகிதாசார முறையில் நடத்த வேண்டும். மேலும் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது தேர்தலுக்குத் தயாராகி உள்ளது. எந்நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமது கட்சி ஆயத்தமாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.