(நா.தனுஜா)

'சிகரட் பிடிக்கும் போது இது மாதிரி சொர்க்கம் இல்ல என்று தோணும். உடலுக்கு கெடுதல் என்று மனசுக்கு தெரிஞ்சாலும் இந்தப் பழக்கத்த கைவிடணும் என்று தோணல. முதலே இந்த பழக்கத்த விட்டிருக்கலாம் என்று இப்ப யோசிக்கிறேன். என்னோட குடும்பத்த நினைக்கும் போது மனசு வலிக்குது. நான் பொறுப்பானவனா நடந்துக்கல என்கிற உண்மைய உணரும் போது காலம் கடந்து போச்சு." சிகரட் பாவனையால் வாய் புற்றுநோய்க்கு உள்ளாகி, தனது வாழ்வின் இறுதி தருணங்களை நோக்கி பயணிக்கும் நோயாளியின் குரல் தளர்வோடு தொடங்கி, காற்றோடு சேர்ந்து கொள்கிறது.

உயிரைப் பறிக்கும் புகையிலை பாவனையை ஒழிக்கும் நோக்கில் உலகலாவிய ரீதியிலே மே மாதம் 31ஆம் திகதி உலக புகையிலை ஒழிப்பு தினமாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இவ்வருடம் 'புகையிலையும், இருதய நோய்களும்" எனும் தொனிப்பொருளில் உலக புகையிலை ஒழிப்பு தினம் அனுட்டிக்கப்பட்டது. புகையிலை பாவனை என்றவுடன் எமக்கு உடனடியாக மனதில் எழும் சிகரட் உபயோகம் மாத்திரமன்றி பாக்கு, புகையிலை போன்றவற்றின் உபயோகமும் பாரதூரமான நோய்களுக்கு வழிகோலுவதுடன், மரணத்தையும் ஏற்படுத்துகின்றன. 

இலங்கையில் மாத்திரமன்றி உலக நாடுகளிலே பல்வேறு இருதய நோய்களையும், புற்றுநோயையும் ஏற்படுத்தும் பிரதான காரணியாக புகையிலைப் பாவனை இனங்காணப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக சிகரட் பாவனை மரணத்தை ஏற்படுத்தும் பிரதான காரணியாக உள்ளது எனும் தகவல் அதிர்ச்சிக்குரியதாகும். 

சிகரட் உற்பத்தியானது அதனை நுகர்வோனின் மூளையிலுள்ள மகிழ்ச்சிக்கான செல்களை தூண்டும் வகையில் வடிவமைக்கப்படுகின்றது. ஒருமுறை நுகர்ந்து பார்க்கலாம் எனும் எண்ணத்தில் நுகர்பவன் அதற்கு நிரந்தர அடிமையாகும் வகையிலேயே அவ்வுற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றது. வெறுமனே தமது இலாபத்தையும், வர்த்தக நலனையும் மாத்திரம் கருத்திற்கொண்டு செயற்படும் புகையிலை தயாரிப்பு மற்றும் விற்பனை வலையமைப்புக்கள் ஒருபுறம், தனது நாட்டின் குடிமகன் மரணிக்கிறான் என நன்கறிந்தும் சிகரட்டை தடைசெய்ய முயற்சிக்காத அரசாங்கம் மறுபுறம் என இன்றளவிலே ஒருவனின் மரணத்திலும், அவனது உறவுகளின் துயரிலும் பணம் பார்க்கின்றன முதலாளித்துவ கம்பனிகள்.

இலாபத்தை நோக்காக கொண்ட முதலாளித்துவவாதம் இவ்வாறிருக்க புகையிலை, குறிப்பாக சிகரட்டை நுகரும் ஒவ்வோர் நாளும் தனது ஆயுட்காலத்தின் ஒரு நாளை இழந்து கொண்டிருக்கின்றேன் என்பதை சிகரட் பாவனையாளன் உணர்ந்திருக்கின்ற போதும், இன்னமும் சிகரட் கம்பனிகளுக்கு பெரும் இலாபத்தை ஈட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கின்றான். அது மாத்திரமன்றி தான் சிகரட்டை நுகரும் சூழலில் உள்ளவர்களையும் மரணத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றான்.

இலங்கையில் புகையிலை பாவனையினால் வருடமொன்றுக்கு சராசரியாக 25,000 பேர் மரணிக்கின்றார்கள். அவர்களில் 22,000 பேர் நேரடியாக புகையிலையை பயன்படுத்தியதால் இறக்கின்ற அதேவேளை, 3,000 பேர் சிகரட் நுகர்வோனால் சூழலுக்கு வெளிவிடப்பட்ட நச்சுப்புகையை சுவாசிப்பதனால் இறந்துபோகிறார்கள். இங்கு புகையிலையை உற்பத்தி செய்யும் கம்பனிகள், புகையிலை விற்பனையை தடை செய்யாத அரசாங்கம், உடலுக்கு தீங்கானது என அறிந்திருந்தும் புகையிலையை நுகரும் வாடிக்கையாளன் ஆகிய தரப்பின் மீது குற்றஞ்சுமத்தி நகர முடிகின்ற போதும், இம்மூன்று தரப்பும் வாழும் சூழலில் வாழ்ந்த ஒரே காரணத்தால் மரணிக்கும் உயிர்கள் தொடர்பில் வருந்தாமல் இருக்க முடியவில்லை. 

இலங்கையில் 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபை சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையானது புகையிலை, மதுசாரம் போன்றவற்றை கட்டுப்படுத்தல், அவற்றின் எதிர்மறை விளைவுகள் தொடர்பில் விழிப்பூட்டல், நாளடைவில் புகையிலை மற்றும் மதுசார பாவனையாளர்கள் அற்றதொரு நாடாக இலங்கையை மாற்றுதல் ஆகியவற்றை நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது. இவ்வதிகார சபையின் தலைவர் கலாநிதி பாலித அபேகோன் பகிர்ந்துகொண்ட சில தகவல்கள் அதிர்ச்சி மற்றும் கவலையை ஒருசேர அளித்தன. 

இலங்கையில் சிகரட் பாவனையை கட்டுப்படுத்த தமது அதிகாரசபை முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பிட்ட அவர், அம்முயற்சிகள் யாவற்றையும் தோற்கடிக்கும் நிதிசார் வலு சிகரட் கம்பனிகளிடம் காணப்படுகின்றது என்றார். முதலாளித்துவ கம்பனிகளிடமுள்ள நிதிசார் பலமும், சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரத்திலுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அக்கம்பனிகளுக்குள்ள மிக நெருங்கிய உறவுமே தம்மால் அரசுக்கு முன்வைக்கப்படும் புகையிலை மற்றும் மதுசாரம் என்பவற்றுக்கு எதிரான திட்டங்கள் அடுத்தகட்டம் நோக்கி நகராமைக்கு அதிமுக்கிய காரணம் எனும் கருத்து மக்கள் மீது அரசுக்குள்ள அக்கறையை கேள்விக்குட்படுத்துகின்றது. 

நாம் வாழும் இந்தப் போட்டி உலகில் வியாபார நிறுவனங்கள் எம்மீதான அக்கறையுடன் செயற்பட வேண்டும் என எதிர்பார்ப்பது சூரியன் மேற்கில் உதிக்க வேண்டும் எனும் கற்பனையை நிகர்த்தது. அதேவேளை அரசாங்கம் தடை செய்யாத யாவும் எமக்கு நன்மையையே விளைவிக்கும் எனக் கருதுமளவு அறிவிலிகள் இருக்கவும் வாய்ப்பில்லை. சிகரட், புகையிலை என்பன நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்பதை நாம் யாவரும் அறிந்தே இருக்கின்றோம். எனில் இவற்றின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என முதலாளித்துவத்தின் முன் கோஷமிடாமல், இவற்றின் விற்பனையை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என முழக்கமிடாமல் எம்மை நாமே சுயபரீட்சைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்.

எம்மை மரணத்தை நோக்கி அழைத்துச் செல்வதோடு மட்டுமன்றி, எமது சொந்தங்களை நிர்க்கதியாக்குவதோடு, புகைத்தலோடு தொடர்பற்ற மூன்றாம் தரப்பையும் பாதிக்கும் சிகரட் மற்றும் புகையிலை பாவனையால் விளையும் ஒரு நன்மையேனும் உள்ளதா என கேள்வியெழுப்பின், பதில் இல்லை என்பதாகவே இருக்கும். 

எதிர்மறை விளைவுகளை மாத்திரம் தரும் ஓர் பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கலாம் என்ற ஒரு தனிமனிதனின் எண்ணமே அவனை அப்பழக்கத்திலிருந்து மீட்கும். வலுவான கொள்கையும், சுயகட்டுப்பாடும் நிச்சயம் புகையிலை பாவனையற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கும். எம் உயிரைப் பணயம் வைத்து இலாபம் பார்க்கும் முதலாளித்துவத்திற்கு தோள் கொடுப்பதும், புகைத்தலை முற்றாக நிறுத்தி அதே முதலாளித்துவத்தின் கால் ஒடிப்பதும் எமது கைகளிலேயே தங்கியுள்ளது. தோள் கொடுப்பதெனின் அதனை மீள் பரிசீலனை செய்வோம். கால் ஒடிப்பதெனின் அதனை இன்றே ஆரம்பிப்போம்.