தடைகளைத் தாண்டி தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டுமா?

Published By: Robert

21 Feb, 2016 | 09:49 AM
image

தெற்கின் மனங்களை வடபுலம் வெல்ல வேண்டும், வடக்கு மக்களின் பிரச்சினைகளை தெற்கு மக்கள் மனிதாபிமானத்துடன் நோக்க வேண்டுமென்ற தாரக மந்திரத்துடன் மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியும் ஆட்சியை அமைத்துக்கொண்டன.

நாம் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது என்பது போல் அமைக்கப்பட்ட கூட்டரசாங்கம் இன்று எதிர்கொள்ளும் சவால்களை நோக்கின் 2016ஆம் ஆண்டுக்கு முன் தீர்வை பெற்றுவிடுவோம் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு மக்கள் மீண்டுமொரு ஏமாற்றத்தை சந்தித்து கொள்வார்களா? என்ற நிலையே எஞ்சி நிற்கின்றது.

காரணம் தெற்கில் எழுந்து வரும் முரண்பாடுகள், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள், மஹிந்த அணியினரின் அட்டகாசங்கள், நாளுக்கு நாள் உருக்குலைந்து கொண்டிருக்கும் நம்பிக்கைகள் அனைத்தும் தமிழ் மக்களின் அச்சத்துக்கு காரணமாகிறது.

இன்றைய சூழ்நிலையில் கூட்டரசாங்கத்தின் நாயகர்கள் என்று வர்ணிக்கப்படும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சுதந்திரக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் யதார்த்தத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறான நெருக்கடியில் அரசியல் சீர்திருத்தம், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, அதிகாரப்பகிர்வு, அடிப்படை பொருளாதாரப் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கான தீர்வை எவ்வழியில் வழங்கப் போகிறார்கள் என்பதே அடிப்படையான சந்தேகமும் கேள்வியுமாகும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெற்கில் முளைத்தெளும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இவரது சகாவான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிரணியினரின் கூட்டுச்சதிகளுக்கும் சவால்களுக்கும் ஈடுகாணவேண்டிய நெருக்குவாரம் காணப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கட்சியானது கடந்த பொதுத்தேர்தலில் மக்களுக்கு கொடுத்த பொருளாதார வாக்குறுதிகள், அரசியல் சாத்தியங்கள் சர்வதேச ஒப்புதல் வாக்குமூலங்கள் தாராளம். இவையனைத்தையும் எவ்வாறு ஈடுகட்டி எதிரே நிமிர்ந்து நிற்கும் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வை தரப்போகிறார் என்பது பெரும்கேள்வியாகும்.

மூன்று தசாப்தகால யுத்தத்தில் இலங்கைப் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது என்பதே உண்மை. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் நம்பிக்கையீனங்கள், சர்வதேச வர்த்தகத்தின் நலிவு நிலைகள், உள்ளூர் பொருளாதாரத்தின் வீழ்ச்சி ஆகியவற்றின் ஒட்டுமொத்த விளைவே அண்மையில் உண்டாகிவரும் பொருளாதார சமூகப் பேராட்டங்களாகும். இவ்வார ஆரம்பத்தில் இடம்பெற்ற பட்டதாரிகளின் போராட்டம் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை, பிக்குகள் போராட்டம் என பல்வேறு பிரச்சினைகளுக்கு நாடு ஆளாகிக்கொண்டிருக்கிறது.

நாட்டில் பெருமளவு வீதமான வரிச்சுமைகள் சாதாரண மக்களின் மீதே சுமத்தப்படுகின்றன. ஆனால் வசதி படைத்தோரிடமிருந்து 20சதவீதமே வரி அறவிடப்படுகிறது. இந்த முறைமையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று பிரதமரே ஒப்புக்கொண்டுள்ளார்.

தென்னிலங்கை மக்களை பொறுத்தவரை ஆட்சிமாற்றத்தின் பின் முதல் முதல் கொண்டுவரப்பட்ட வரவு-செலவுத்திட்டத்தின் மீதும் பூரண திருப்தியற்றவர்களாகவே காணப்படுகின்றனர். யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்ததன் பின்னும் சாதாரண மக்களை மையப்படுத்தி வரவு-செலவுத் திட்டங்கள் தீட்டப்படவில்லையென்ற தமது ஆதங்கங்களை மக்கள் அண்மையில் பல போராட்டங்களின் மூலம் வெளிக்காட்டியுள்ளனர்

ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டரசாங்கம் தமிழ்த்தரப்பினருக்கு குறிப்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு வழங்கியிருந்த அரசியல் சத்தியங்களைக் காப்பாற்ற பின்னடிக்கிறது. அவற்றை மறந்து செயல்பட்டுவருகிறார் என்ற அவநம்பிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் கடும்போக்குவார் சனங்களை உருவாக்கி வருகிறது. உதாரணமாக அரசியல் கைதிகள், விவகாரம் மற்றும் காணாமல் போனோர் விவகாரம் என்பன இதில் அடங்கும். இதில் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் இன்னும் பிசுபிசுத்த நிலையிலேயே காணப்படுகிறது.

இதுபோலவே காணாமல் போனோர் தொடர்பில் பிரதமர் யாழ்.புலத்தில் தெரிவித்த கருத்து எத்தகைய வாதப்பிரதிவாதங்களை இன்னும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். காணாமல் போனவர்களாக்கப்பட்டவர்கள் இறந்தமைக்கு காரணமென அவர் கொட்டிய உண்மைகள் தமிழ் மக்கள் மத்தியில் எத்தகைய உணர்வலைகளை உண்டு பண்ணியது என்பது யாவரும் அறிந்து கொண்டவிடயமாகும்.

பிரதமர் தெரிவித்த கருத்தின் அதாவது உண்மையின் பின்னணியிலேயே காணாமல் போனோர் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா. சம்பந்தன் நாளை மறுநாள் (23.02.2016) இதற்கான சபை ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டுவரவுள்ளதுடன் பாராளுமன்றத்தில் விவாதமும் நடைபெறவுள்ளது.

காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அரசியல் நிலைப்பாட்டைக் கோரும் வகையில் சபை ஒத்திவைப்பு பிரேரணையை சம்பந்தன் கொண்டுவந்து உரையாற்றவுள்ளார்.

இவையொரு புறமிருக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தளம்பல் நிலையொன்று காணப்படுவதையும் கவனமாக அனுமானிக்க முடிகிறது. இறுதிப்போரின் போது நடைபெற்ற யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணையா? உள்ளகப் பொறிமுறையா கலப்பு நீதிமன்றமா? சர்வதேச நிபுணர் குழு அனுசரணையால் ஆன விசாரணையா என்ற விடயம் சார்பில் பல்வேறு குழப்பநிலைகள் காணப்படுவதை யாவரும் அறிவர்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச பொறிமுறைக்கோ சர்வதேச ஒத்துழைப்புக்கோ இடமில்லையென அண்மையில் அடித்துக்கூறியிருந்த பிரதமர் திடீரென தனது கருத்தைத் திருத்திக்கொண்டு பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் நாங்கள் முன்வைத்த அர்ப்பணிப்புக்கு அமைவாக செயற்படுவோம். எனவே சர்வதேச தலையீட்டை நாம் நிராகரிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வின் ஆட்சிக்காலத்தில் தலைமாறான வெளிநாட்டுக்கொள்கையொன்று பின்பற்றப்பட்டு வந்ததான விமர்சனங்கள் உலாவிவந்தன. சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் அவர் பற்றுதல் கொண்டு நடந்ததாகவும், இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை புறந்தள்ளியதாகவும் ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்கு உதாரணமாக சீனாவின் உதவியுடனான கடல் நகர வர்த்தக உடன்படிக்கைகள் இராணுவ தளபாடக்கொள்வனவு என ஏராளமாக உதாரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. ஆனால் புதிய அரசாங்கத்தின் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன என்று கூறப்படுகின்ற போதும் இந்த மாற்றத்தின் பின்னணியில் பிரதமர் உள்நாட்டிலும் வெளிநாட்டளவிலும் சில பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியுள்ளது என்பதற்கு உதாரணமாக இந்தியாவுடனான ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் (27.01.2016) கொழும்பில் சோஷலிச இளைஞர் சங்கம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டமானது நேரடியாகவே பிரதமரை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமாகும். இதன் காரணமாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பின்வருமாறு தெரிவித்திருந்தார். இந்தியாவுடனும் சீனாவுடனும் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டே தீருவோம். இதை யார் எதிர்த்தாலும் நாம் அஞ்சப்போவதில்லையெனத் தெரிவித்தார்.

இவையெல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்ப்போமானால் பேரளவில் உருவாகியிருக்கும் தேசிய அரசாங்கத்தின் தலைவராக இருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்பட்டிருக்கும் சவால்கள் அவர் தலைமையிலான ஆட்சியில் சமநிலையற்ற போக்கையே நாளுக்கு நாள் உருவாக்கிக்கொண்டுவருவதை அனுமானிக்க முடிகிறது. இவ்வாறானதொரு நெருக்கடி நிலையில் அரசியல் திட்ட மாற்றம், அரசியல் பகிர்வு, அதிகாரத்தீர்வு விஸ்தரிப்புகளைக் கொண்டுவரக்கூடிய சாத்திய நிலையொன்று உருவாக முடியுமா? என்ற சந்தேகங்கள் வலுப்பெற்று வளர்ந்துவருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிலுவையை சுமப்பது போல் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை சுமந்துகொண்டிருக்கும் நிலையில் அவர் முகங்கொடுக்கும் பிரச்சினைகளும் அவிழ்த்துவிட வேண்டிய முடிச்சுக்களும் தீர்த்துவைக்க வேண்டிய விவகாரங்களும் அவர் முன்னே மலைபோல் குவிந்து கிடக்கின்றன என்பதே உண்மை.

தனது தாய்க் கட்சியை பிளவுபடாமலும் வீழ்ச்சி காணாமலும் நடத்திச் செல்லவேண்டிய பாரிய பொறுப்பு ஒருபுறமும் நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கும் தேசிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டிய தேசியப்பொறுப்பு இன்னொரு புறமும் சர்வதேச கொள்கைகளையும் சம்பிரதாயங்களையும் சுதாகரித்துக்கொண்டு தொங்குபாலத்தில் நடக்கவேண்டிய தேவை மறுபுறமும் நாட்டின் தலைவர் என்ற வகையில் அவர்தலையில் தான் பொறுப்பிக்கப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதியாக வெற்றிகொண்டு பதவியேற்ற காலம் முதல் கட்சியை காக்கவேண்டிய பாரிய பொறுப்பு அவர் தலைக்கு பொறுப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்தும் வகையிலோ அதற்கு மாற்றீடாகவோ இன்னுமொரு கட்சியை உருவாக்கும் தீவிர முயற்சியில் ஒரு அணியினர் செயற்பட்டுவருகின்றனர் என்பது யாவரும் அறிந்துகொண்ட விடயம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தோல்வி அடையச்செய்யும் விதத்தில் மஹிந்த அணி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தனது உறுப்பினர் எவரும் தனித்து செயற்படமுடியாது என அதிரடியாக அறிவித்துள்ளதையடுத்து இதுவரை காலமும் கூட்டு எதிரணியாக செயற்பட்டு வந்த மஹிந்த அணியினர் தமது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளதுடன் தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுக்க முற்பட்டால் அதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளதுடன் சுதந்திரக் கட்சியொன்றை உருவாக்கும் வேகப்போக்கையும் காட்டிவருகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அண்மையில் (12.02.2016) பத்தரமுல்லையில் தனது உத்தியோகபூர்வ அரசியல் இணைப்பு அலுவலகத்தை திறந்து வைத்தமை மீண்டுமொரு ஜனநாயகப் புரட்சிக்கு தயாராகுங்கள் என்ற கோஷத்துடன் எதிரணியினர் மாற்றுக்கட்சி ஒன்றின் உருவாக்கத்துக்காக செயற்பட்டு வருவதாகவும் பேசப்படுகிறது. அதனை முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் ஊகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மஹிந்தவும் அவர் சார்ந்த அணியினரும் மைத்திரியின் மீது அப்பட்டமாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள். இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டிற்கும் இராணுவத்துக்கும் பாரிய நெருக்கடிகள் ஏற்படப்போகின்றன.

இன்று நாட்டின் பாரிய பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளக்கூடிய வலு அரசாங்கத்திடம் இல்லை. நாட்டில் பல்வேறு அடக்குமுறைகள் இடம்பெற்றுவருகின்றன என்ற குற்றச்சாட்டை எதிரணியினர் முன்வைத்துவருகின்றனர்.

இது ஏதோ ஒருவகையில் தெற்கில் அமைதியின்மையையும் சல சலப்பையும் உண்டாக்கி வருகின்றது என்பது மறுப்பதற்கு இல்லை. இவ்வாறானதொரு நெருக்கடியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வை யாப்புவழியிலோ அல்லது மாற்று வழிகளிலோ தீர்த்து வைப்பதற்கான முன்னெடுப்புகள் எவ்வாறு வெற்றிகொள்ளப்படுமென்பது சஞ்சலத்தை உண்டுபண்ணும் போராகவே காணப்படுகிறது. ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை மைத்திரியின் மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

இன்றைய சந்தர்ப்பம் கைநழுவிப்போகுமாக இருந்தால் வரலாற்றில் இன்னுமொரு சந்தர்ப்பத்தை வரவழைக்க முடியாது என்பதை வெளிப்படையாகவே கூறிவருகிறார்கள். சம்பந்தனைப் பொறுத்தவரை வரலாறு திரும்பிக்கொண்டிருக்கும் பாதையில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் இலக்கை அடைந்தே தீருவோமென கூறிவருகிறார்.

ஜனாதிபதி இன்று எதிர்கொள்ளும் இன்னுமொரு முக்கிய பிரச்சினை. நாட்டில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைக்கான தீர்வையும் ஒரே தராசில் நிறுக்க வேண்டிய கடைப்பாடாகும். மிக நீண்ட காலப்பிரச்சினையாக புரையோடிப்போய்க்கிடக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வை தனது காலத்தில் காண்பேன் என்பதை அவர் உறுதிபடவும் உத்தரவாதத்துடனும் கூறியிருக்கிறார். அதன் முத்தாய்ப்பாகவே புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதற்குரிய தீவிர முயற்சியிலும் ஈடுபட்டுவருகின்றார் என்பதை நாம் கண்டுகொண்டிருக்கின்றோம்.

தமிழ்மக்களுடைய கோரிக்கைகளும் அபிலாஷைகளும் நியாயத்தன்மை கொண்டவையாக இருக்கின்ற போதும் அதற்கு தவறான வியாக்கியானங்களையும் அர்த்தங்களையும் தெற்கு மக்களுக்கு ஊட்டிக்கொண்டிருக்கும் ஒருநச்சுக் கூட்டத்தவர் இருக்கிறார்கள் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.

இவை எவ்வாறு வெற்றிகொள்ளப்படும், நாட்டில் ஏற்படவிருக்கும் புதியதொரு அரசியல் சீர்திருத்த மாற்றத்தின் மூலம் இன இணக்கப்பாட்டுக்கான மூலவித்து இடப்படுமா? என்பதெல்லாம் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் தலைமைகளின் கையில்தான் உண்டு என்பதே உண்மை.

(திருமலை நவம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38