தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் திகதி ஆர்ப்பாட்டம் செய்த பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1 இலட்சம் பேர் பேரணியாக சென்ற போது நடந்த கலவரத்தை அடக்க நடந்த பொலிஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகியதோடு மேலும் பலர் காயம் அடைந்தனர்.

இதற்கு ஐ.நா.சபை மனித உரிமைகள் குழு நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு சம்பவம்  குறித்து ஐ.நா.சபை மனித உரிமைகள் குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,

"ஸ்டெர்லைட் இங்கிலாந்தில் இயங்கும் வேதாந்தா குழுமத்தின் வர்த்தக நிறுவனமாகும். மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தூத்துக்குடியில் போராட்டம் நடத்த பேரணியாக சென்றவர்கள் மீது பொலிஸாரால் ஆயுதங்களை பயன்படுத்தி கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காலதாமதமின்றி சுதந்திரமான ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய அரசை (மத்திய அரசை) வலியுறுத்தி இருக்கிறோம்.

வர்த்தக நிறுவனங்கள் மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் போது போராட்டம் நடத்தும் உரிமை மக்களுக்கு உண்டு. ஐ.நா.வின் வழி காட்டுதல் கொள்கைகளை அனைத்து தொழில் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்

அனைத்து தொழில் நிறுவனங்களும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் அர்த்தமுள்ள உரிய பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இந்திய சுற்று சூழல் விதிகளுக்குட்பட்டு நடப்பதாக முழு உத்தரவாதம் அளித்த பிறகே ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க வேண்டும்." என குறிப்பிடப்பட்டுள்ளது.