(இரோஷா வேலு) 

மேல்மாகாணத்தில் போக்குவரத்து சேவையினை மேம்படுத்துவதற்காக தனியார் பஸ்களை அதிகளவில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல்மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபையின்  தலைவர் தேசபந்த துஷித குணரத்ன தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, 

மேல்மாகாணத்தில் போக்குவரத்து சேவையினை மேம்படுத்துவதற்காக தனியார் பஸ்களை அதிகளவில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேல்மாகாணத்தில் தொழில் காரணமாக பஸ்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். இவ்வாறு வேலைநேரங்களில் அதிகளவானோர் பஸ்களை பயன்படுத்துவதாகவும் அவர்கள் மிதிப்பலகையில் பயணிப்பதால் தவறி வீழ்வதின் மூலம் அதிகளவான விபத்துக்களும் ஏற்படுவதாகவும் அறியக்கிடைக்கின்றது. 

பொதுச் சேவையில் ஈடுபடும் பஸ்களின் எண்ணிக்கையில் காணப்படும் குறைப்பாட்டினால் அதிகளவில் மக்கள் பஸ்களுக்காக காத்திருக்க வேண்டியுள்ளதோடு, அளவுக்கு அதிகமாக பிரயாணிகள் பஸ்களில் ஏற்றப்படுவதினால், சிலருக்கு மூச்சுத்தினறல் ஏற்படுவதாகவும், பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கும் முகங்கொடுக்கவும் வேண்டியுள்ளது. 

மேலும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருடர்கள் விலையுயர்ந்த கையடக்க தொலைப்பேசிகள் மற்றும் பண பைகளை திருடிச் செல்வதாகவும் அதிகளவான முறைப்பாடுகளும்  கிடைக்கப்பெற்றுள்ளது. 

பஸ் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் சில வரையறைகள் குறித்த அவதானம் செலுத்தப்படும். அவற்றில் பொது மக்களுக்கு இடையூறாக பஸ்களில் ஒலிபெருக்கிகளின் பயன்படுத்தல் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

அண்மையில் எரிபொருள் விலை அதிகரிப்பினால் பஸ் கட்டணங்களில் விலை அதிகரிக்கப்பட்டது. ஆனால் சில உள்ளூர் பஸ்களில் கட்டணத்துக்கு அதிகமான பணம் அறவிடப்படுவதாகவும், மிகுதிப் பணம் வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

எனவே அனைத்து தனியார்  பஸ் உரிமையாளர்களுக்கும் பஸ் கட்டண அறவீட்டின் போது முறையாக டிக்கெட் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, இவை உரிய முறையில் நடைமுறைப் படுத்தப்படுகின்றதா என பரிசோதனைகளை மேற்கொள்ள அதிகளவான டிக்கெட் பரிசோதகர்கள் பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

எது எப்படியிருப்பினும் சில பஸ்களில் வரையறைகளை மீறிச் செயற்படுவதாகவும் அண்மையில் பல்வேறு முறைப் பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றை கவனத்தில் கொண்டு குறித்த பஸ்களில் அனுமதிப் பத்திரம் விரைவில் ரத்துச் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  

இவற்றுடன் பஸ்களில் பொது மக்கள் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்தால் உடனடியாக 0115559595 என்ற தொலைப் பேசி இலக்கத்துக்கு தொடர்பினை மேற்கொண்டு முறைப்பாடளிக்கவும் அல்லது  தலைவர் வீதி போக்குவரத்து அதிகார சபை ரன்மகபாய பத்தரமுல்ல என்ற முகவரிக்கு கடிதம் மூலம் தெரிவிக்கவும் என்றார்.