கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தினரால் வருடாந்தம் நடத்தப்படும் மாவட்ட மட்டத்திலான மாபெரும் சதுரங்கப் போட்டிகள் கடந்த 26ஆம் 27ஆம் திகதிகளில்  நடைபெற்றது. 

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இப்போட்டியானது  8,10,12,14,16,18,20 வயது, 20 வயதிற்கு மேற்பட்டோர் என்ற வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் என தனித்தனிப் பிரிவுகளாக  பதினாறு பிரிவுகளாக நடைபெற்றன.

இப்போட்டிகளில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினர். 

போட்டி முடிவில் 27ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு பரிசில் வழங்கல் நிகழ்வு நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் தலைவர் தி.சிவரூபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் என்.கௌரிதாசனும், சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி வலயத்தின் உடற்கல்வி பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.காந்தச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெற்றியாளர்களில் 8 ,10, 12 வயது பிரிவுகளில் 1ஆம் இடம்பெற்றவருக்கு 2500 ரூபாவும், 2ஆம் இடம்பெற்றவருக்கு  1500 ரூபாவும், 3 ஆம் இடம்பெற்றவருக்கு 1000 ரூபாவும்  ஏனைய வயதுப் பிரிவுகளில் 1ஆம் இடம்பெற்றவருக்கு 5000 ரூபாவும் 2ஆம் இடம்பெற்றவருக்கு 3000 ரூபாவும், 3 ஆம் இடம்பெற்றவருக்கு 2000ரூபாவும் பணப் பரிசில்களாக வழங்கப்பட்டதுடன், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக்கிண்ணங்கள், வெற்றிச்சான்றிதழ்கள் என்பனவும் வழங்கப்பட்டன.

4 தொடக்கம் 10 வரையான இடங்களைப் பெற்றவர்களுக்கு  வெற்றிக்கிண்ணங்களும், வெற்றிச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

போட்டியின் சகல சுற்றுக்களிலும் முழுமையாகப் பங்குபற்றிய அனைவருக்கும் பங்குபற்றுனர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன