ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை கொலை செய்யுமாறு படைவீரர்களிடம் முகநூல் ஊடாக கோரிக்கை விடுத்தவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலபிட்டிய இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

முகநூல் ஊடாக ஜனாதிபதியையும் பிரதமரையும் கொலை செய்யுமாறு வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்ட குறித்த நபர் நாடு திரும்பயதும் அவரை கைது செய்யுமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மலேசியாவிற்கு சென்றுள்ளார். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை கொலை செய்ய சூழ்ச்சி செய்தமை, சட்ட ரீதியாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தமை, அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த நபர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமால் லக்மன என்னும் பெயரிலான முகநூல் கணக்கில் கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமரை கொலை செய்யுமாறு படைவீரர்களிடம் கோரும் வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டுள்ளது.