(எம்.கீதன்)

வடக்கு மாகாணத்தின் யாழ்.நகரத்தின் கரையோரப் பகுதியில்  62.29 ஏக்கர் பரப்பளவு உடைய,  புதுமையும் அழகும் கொண்ட மைந்துள்ள புனித அந்தோனியாரின் ஆலயத்தை அமையப் பெற்ற கிராமமே பாஷையூர் கிராமமாகும்.

கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் மன்னார் மாவட்டத்தின் மாந்தை பிரசித்தி பெற்ற இறங்குதுறையாக விளங்கியது. அப்போது கொழும்புக்குச் செல்லும் பயணிகள் யாழ்.,கொழும்புத்துறை யையும் சிறிய துறைமுகமாக அக் காலங்களில் பயன்படுத்தி வந்தனர். பயணிகள் கொழும்பு செல்வதற்கான அனுமதி பத்திரங் கள் பாஷையூரில் விநியோகிக்கப்பட்டதால் இக்கிராமத்திற்கு ''பாசூர்'' என்று பெயர் சூட்டப்பட்டதாக இக் கிராமத்தில் வாழ்ந்த முன்னைநாள் தலைமுறையினர் வாய் மொழியாகப் பேசப்பட்ட கதையும் உண்டு. 

அத்துடன் இதற்கு இன்னுமொரு சரித்திரக் கதையும் உண்டு. அதாவது, 'யாழ்பாடி' என்னும் ஒருவர் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த பரராஜசிங்கன் மன்னனின் அரச சபைக்கு வந்து தனது திறமையை வெளிக்காட்டினான். அவனது திறமையைக் கண்டுவியந்த அரசன் பரராஜசிங்கன், யாழ்பாடிக்கு வெகுமதியாகக் கொடுத்த மணல்மேடுதான் பாஷையூர் கிராமம் என்றும் சரித்திரக் கதைகள் கூறுகின்றன. 

மேலும் அக்காலத்தில் இக்கிராமத்தைச் சேர்ந்த கலைஞர்கள் முத்தமிழில் திறமை பெற்றவர்களாய் இருந்ததால் 'பா செய்யும் ஊர்' எனும் பெயர் இக்கிராமத்திற்கு வழங்கப்பட்டதாகவும் பிற்காலத்தில் அப் பெயர் மருவி பாஷையூர் என அழைக்கப் பட்டதாகவும் வாய்மொழியாக கூறப்பட்டும் வந்திருக்கின்றன.

மேலும், ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தபோது பாஷையூர் கிராமத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்தார்கள் என்று 1775 ஆம் ஆண்டு யாழ்.மறைமாவட்ட ஆயர் இல்லம் வெளியிட்ட வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டும் உள்ளது. அப் போது ஒல்லாந்தர் காலத்துக்கு முன்னர் போர்த்துக்கேயரின் வருகையின் போது தாங்கள் செப வழிபாடுகளை மேற்கொள்ள புனித அந்தோனியார் திருச்சொரூபத்தை வைத்து ஒரு சிறிய குடிசை ஆலயத்தை அமைத்தனர் என்றும் கூறப்படுகிறது. 

அதற்குப் பிற்பட்ட காலங்களில் யாழ்ப்பாண இராச்சியம் சங்கிலியன் மன்னன் கையில் வீழ்ந்ததும் போர்த்துக்கேயரின் வழிபாட்டுத் தலங்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற் படுத்தினான். அப்போது பல வேதகலாபனைகள் நடந்தன. கட்டாய மத மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. மன்னனின் அதியுச்ச செயற்பாட்டினால் புனிதரின் வழிபாட்டுத் தலமும் அழிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறினர் என்றும் சான்றுகள் கூறுகின்றன.

1814 ஆம் ஆண்டுகளில் இந்தியா, கோவா மாநிலத்திலிருந்து வருகைதந்த ஒறிற்றோரியன் சபையைச் சேர்ந்த குருவானவரான அருட்திரு யோக்கிம் கபிரியேல் அடிகளாரினால் இக்கிராமத்தில் முருகைக் கல்லினாலான ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தின் அமைப்பாக இரு பக்கங்களிலும் பாலை மரங்களைக் கொண்டு தூண்கள் அமைக்கப்பட்டு அவற்றின் முகப்பாரம் தாங்குவதற்கும் அமைப்பும் உருவாக்கப்பட்டது. 

அவருக்குப் பிற்பட்ட காலங்களில் இக்கிராமத்திற்கு வந்த குருவானவரான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அருட்திரு விக்டர் டெலாண்டெஸ் அடிகளாரின் அயராத முயற்சியினால் 106 அடி நீளமும் 38 அடி அகலமும் கொண்ட ஆலயம் 20 ஆயிரம் ரூபா செலவில் 1911 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 13ஆம் திகதி கட்டப்பட்டது. இவ்வாலயக் கட்டடம் உரோமைக் கலை நுட்பங்களுக்கு அமைய இக் குருவானவரின் ஆலோசனை யின் பேரில் கட்டப்பட்டது. இக்குருவானவர் இப் புனிதரின் ஆலயத்திற்கு ஆற்றிய அளப்பெரிய சேவையின் நிமித்தம் அவர் இறந்த பின்பும் அவரது உடல் ஆலயத்தின் மேற்குப் பக்கமாக உள்ள கோவில் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அக்கல்லறையில் அவருடைய பெயர், பிறந்த, இறந்த திகதி, அவர் சேவையில் இருந்த காலம் என்பன குறிப்பிடப்பட்டு அவரின் உருவப்படமும் பொறிக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பின்னர் 1935 ஆம் ஆண்டு அப்போது பங்குத்தந் தையாகவும் பின்னர் ஆயராகவும் இருந்த எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையினால் இரண்டு கோபுரங்கள் எழுப்பப்பட்டன. அத்துடன் ஆலயத்தின் நடுவே காணப்படும் சிம்மாசனம், யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த சரவணமுத்து என்னும் சிற்பியினால் செதுக்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்றுவரை பழுதுபடாது உருண்டோடும் சிங்காரத் தேரும் அவராலே வடிவமைக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு யாழ்.குடாநாட்டு இராணுவ நடவடிக்கையில் ஷெல் வீச்சுகள், விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இக்கிராமம் அழிவடைந்த போது அற்புதமாக அவரின் திருச்சொரூபம் உட்பட ஏனைய சொரூபங்களுக்கும் சிங்காரத் தேருக்கும் எதுவிதசேதமும் ஏற்படாமல் அப்படியே காணப்பட்டது. ''காலதிகாலமாய் பவனி  வந்த தேரும் பழுதின்றி நின்றதய்யா. அது பவள ரதமே ஐயா'' என்று பாடலும் எழுதப்பட்டமை இங்கு குறிப்பிட வேண்டிய விடயமாகும்.

மேலும் பெரிய வெள்ளிக்கிழமை அன்று கல்லறை ஆண்டவரின் திருவுடலை பவனியாகக் கொண்டு செல்வதற்கென ஆசந் தியும் புனித அந்தோனியாரும் புனித செபஸ்தியாரும் எழுந்த ருளியிருக்கும் இருப்பிடமும் சரவணமுத்து சிற்பியாலே உரு வாக்கப்பட்டது. சிம்மாசனத்தின் நடுவே எழுந்தருளியிருக்கும் புனித அந்தோனியாரின் உயர்ந்த திருச்சொரூபம் உரோமிலிருந்து எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் திருப்பொழிவு செய்யப்பட்டது.  இங்குள்ள பிரமாண்டமான திருச்சிலுவைப் பாதை படங்கள் அனைத்தும் 1918 ஆம் ஆண்டளவில் பெல்ஜியம் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டன. அவை இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு  சரித்திர கால புகழ்பெற்று விளங்கும் இவ் வாலயத்தின் திருவிழா  எதிர்வரும்  13 ஆம் திகதி பெருவிழா காண்பது புனிதரின் பக்தர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியே.