பாலஸ்தீனியர்களிற்கும் இஸ்ரேலிய படையிருக்கும் இடையில் கடந்த சில வாரங்களாக மூண்டுள்ள மோதல் காரணமாக பாலஸ்தீன பகுதிகளில் முன்னொருபோதும் இல்லாத மருத்துவநெருக்கடி  உருவாகியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை குழு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் காஸா எல்லையில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக 13000 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள செஞ்சிலுவை குழு இரு மருத்துவ குழுவை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

காஸா எல்லையில் சமீபத்தில் இடம்பெற்ற  ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக முன்னொருபோதும் இல்லாத  மருத்துவநெருக்கடிஉருவாகியுள்ளது என மத்திய கிழக்கிற்கான சர்வதேச செஞ்சிலுவை குழுவின் அதிகாரி ரொபேர்ட் மர்டினி தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்துவதற்கே முன்னுரிமை வழங்குகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

குண்டுகள் துளைத்த காயங்களிற்காக நூற்றுக்கணக்கானவர்களிற்கு சிகிச்சை அளிக்கவேண்டியுள்ளது அதேவேளை பலரிற்கு சத்திரசிகிச்சை செய்யவேண்டியுள்ளது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் சுகாதார துறையினர் தற்போதைய நெருக்கடியை கையாளும் நிலையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.