மீனவர்களின் படகுகளை விடுவிக்காவிட்டால் எதிர்வரும் 29 ஆம் திகதி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக தஞ்சை, நாகை உட்பட தமிழகத்தின் 8 மாவட்ட மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால், கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நாகையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

அப்போது இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வைத்துள்ள 75 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், நீண்டகாலமாக நிலவி வரும் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வுகாண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இலங்கை வசமுள்ள 75 விசைப் படகுகளை விடுவிக்கக்கோரி எதிர்வரும் 29ஆம் திகதி 8 மாவட்ட மீனவர்கள் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், மீனவர்கள் பிரச்சினைக்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.