(நெவில் அன்தனி, எம்.எம். சில்வெஸ்டர்)

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஸ்ரீலாங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகசபைத் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. 

இந்தத் தீர்ப்புக்கு அமைய இன்றைய (நேற்று 31) தினம் நடத்தப்படவிருந்த வருடாந்தப் பொதுக்கூட்டத்தை நடத்தாமலிருக்க தாங்கள் தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

அதேபோன்று விசேட பொதுக்கூட்டத்தை நடத்தி விளையாட்டுத்துறை விதிகளை மாற்றியமைக்கவும் தீர்மானித்திருந்தோம். அதற்கும் இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என கிரிக்கெட் தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது திலங்க சுமதிபால தெரிவித்தார்.

குறிப்பாக இத் தேர்தலில் நான் போட்டியிடுவதைத் தடுக்கும் நோக்கில் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தகுதியற்றவன் எனவும் ஏதேனும் வழியில் நான் தெரிவு செய்யப்பட்டால் அதனை இரத்துச் செய்யவேண்டும் எனவும் இடைக்கால நிருவாக சபையை நியமித்து என்னை வெளியேற்றவேண்டும் எனவும் பல்வேறு விமர்சனங்கள், கருத்துக்கள் முன்வைக்ப்பட்டன. எவ்வாறாயினும் எனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கான சாட்சியங்களை நிரூபிக்க எடுத்த முயற்சிகள் கைகூடாமல் போனதால் நான் போட்டியிடுவதைத் தடுக்க முடியாமல் போனது என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் நான் தேர்தலில் போட்டியிடுவதற்கு சகல தகுதிகளையும் கொண்டவன் என நாங்கள் நியமித்த தேர்தல் குழுவினர் உறுதிப்படுத்தியிருந்ததை சகலரும் அறிவர். 

மேலும் எமது நிருவாக சபையினரோ, உறுப்பினர்களோ பதவிகளைத் தொடராமலிருப்பதற்கு தடையுத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

இதன் காரணமாக நேற்று இரவு (புதன்கிழமை) விசேட கூட்டத்தை நடத்தி குறைபாடுகளை நிவர்த்தி செய்து தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துதரவேண்டும் என்ற கோரிக்கையை நேற்றுஇரவு (புதன்) விளையாட்டுத்துறை அமைச்சரிடம் எழுத்துமூலம் சமர்ப்பித்தோம். 

இது தொடர்பாக இன்று காலை (வியாழன்) அமைச்சரை சந்தித்து மிக நீண்ட நேரம் கலந்துரையாடினோம். இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் சகல உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர் என திலங்க சுமதிபால தெரிவித்தார்.

எமது தேசிய அணியினர் மேற்கிந்தியத்தீவுகளில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து தென் ஆபிரிக்கா இங்கு வருகை தருகின்றது. அதன் பின்னர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. அத்துடன் இங்கிலாந்தும் நீண்ட கிரிக்கெட் விஜயம் ஒன்றை இங்கு செய்யவிருக்கின்றது. 

எனவே அடுத்த மூன்று, நான்கு மாதங்கள் மிக முக்கிய காலகட்டம் என்பதால் அதனைத் தொடர்வதற்கு அமைச்சரிடம் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இதனை விட பல்வேறு வியூகங்களையும் திட்டங்களையும் வகுத்து இவ் வருடம் தேசிய கிரிக்கெட் அதாவது லங்கா ப்றிமியர் லீக் போட்டியை நடத்த தீர்மானித்தோம். இதனை முன்னிட்டு ரசல் ஆர்னல்டை நியிமித்துள்ளோம். இது குறித்தும் அமைச்சரிடம் எடுத்துக் கூறியதுடன் அதற்கான அனுமதியையும் கோரினோம் என்றார் அவர்.

இவை எல்லாவற்றையும் விட நாங்கள் ஏற்கனவே கலந்துரையாடியது போன்று எமது கனவெல்லாம் உலகக் கிண்ணத்தை வெல்வதாகும். அதற்கான ஏற்பாடுகளை சிறுக, சிறுக உயர்நிலையை நோக்கி எமது வீரர்களை தயார்படுத்தியவாறு நகர்ந்துகொண்டிருககின்றோம். எமது அணியை ஸ்திரப்படுத்துவதே எமது நிருவாகத்தின் பிரதான நோக்கமாகும். இவற்றை எல்லாம் நாம் நிறைவேற்றுவதற்கு ஜனநாயக ரீதியாக தெரிவான எமது நிருவாக சபை தொடர்ந்து செயற்படுவதற்கு அனுமதிக்கப்படுவது உசிதம் என கருதுகிறோம். ஏனேனில் இன்றுடன் (மே 31, 2018) எமது பதவிக்காலம் நிறைவடைகின்றது என்றார்.

தேசிய தேவையைவிட தனி ஒருவரின் தேவையை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் எமக்கு எதிராக எடுக்கப்பட்ட பிரயத்தனம் இது என்பது தெளிவாகின்றது. 

எம்மைப் பொறுத்தமட்டில் கிரிக்கெட் விளையாட்டுத்தான் மிகவும் அவசியமானது, உயரியது. எனவே தனிப்பட்டவர்களின் பிரச்சினைகளை ஓரங்கட்டிவைத்துவிட்டு கிரிக்கெட் விளையாட்டை ஸ்திரப்படுத்துவதே எமது தற்போதைய அவசியமாகும்.

அதற்கான சூழலை விளையாட்டுத்துறை அமைச்சர் ஏற்படுத்திக்கொடுப்பார் என நான் நம்புகின்றேன். அவரது அனுமதி அவசியம். ஐ சி சி.க்கும் தற்போதைய சூழ்நிலை குறித்து எழுத்துமூலம் அறிவிக்கவும் தீர்மானித்துள்ளோம்.

மேலும் ஜனநாயக ரீதியில் தேர்தல் மூலம் தெரிவான நிருவாக சபை நீக்கப்பட்டு அமைச்சரால் இடைக்கால சபை நிறுவப்பட்டால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெறும் பார்வையாளர் நிலைக்கு தள்ளப்படும். கணக்காய்வு அறிக்கையை ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் அங்கீகரிக்காவிட்டால் ஐ.சி.சி.யிடமிருந்து எமக்கு கிடைக்கவேண்டிய நிதியும் இடைநிறுத்தப்படும். 

எனவே நாட்டின் நலன்கருதி தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும். இந்த தீர்ப்பு குறித்து நான் மிகவும் வேதனை அடைகின்றேன். இந்த ஒன்றரை வருட காலமாக நாங்கள் எவ்வளவோ பணிகளை நிறைவேற்றியுள்ளோம். அவை அனைத்தும் இந்தத் தீர்ப்பின் மூலம் முற்றாக முடங்கிவிட்டதாகவே நாங்கள் நம்புகின்றோம். 

எனினும் நீதிமன்ற தீர்ப்பை ஏற்கின்றோம். ஆனால் இந்தத் தீர்ப்பினால் தோன்றியுள்ள சிக்கில் மிகவும் ஆழமானது என கருதுகின்றேன் என திலங்க சுமதிபால மேலும் தெரிவித்தார்.