பிரான்ஸ் நாட்டின் கலாசாரம் மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரெஞ்ச் வசந்த காலத்தின் 7 ஆவது நிகழ்வு (French Spring Festival) கொழும்பு மற்றும் கண்டியில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி முதல் ஜூலை 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதரகம் மற்றும் அலியன்ஸ் பிரான்ஸிஸ் கோட்டே ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

குறித்த நிகழ்வு இடம்பெறும் காலப்பகுதிகளில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் பொதுமக்கள் பங்குபற்ற வசதிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. பொது மக்களுக்கான முக்கிய நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறும். 

கொழும்பு, பார்க் வீதியில் அமைந்துள்ள கபே பிரான்ஸிஸ் இல் பிரான்ஸ் நாட்டின் பிரபல இசைக் கலைஞரின் பங்களிப்புடன் இசை நிகழ்ச்சியொன்றும் இடம்பெறும். இதனையடுத்து அவரது இசை நிகழ்ச்சி மீண்டும் கண்டி ஹமாயா ஹில்ஸில் 23 ஆம் திகதி இடம்பெறும் இசை நிகழ்ச்சியிலும் இவர் கலந்துகொள்வார்.

ஜூலை 11 ஆம் திகதி பிரான்ஸ் தேசிய நடன அமைப்பு சுற்றுலா மையத்தின் நடனவடிவமைப்புக் கலைஞர் மற்றும் இலங்கையின் நடனவடிவமைப்புக் கலைஞர் ஆகியோர் இணைந்து முன்னெடுக்கும் இலவச பயிற்சிப்பட்டறையொன்றும் இடம்பெறவுள்ளது.

ஜூலை 12 ஆம் திகதி கொழும்பு - 02 இல் அமைந்துள்ள பாதுகாப்பு பாடசாலை திரையரங்கில் சமகால நடன அமைப்புடன் தயாரிக்கப்பட்ட புதிய நடனம் மற்றும் பாலே நடனங்கள் இடம்பெறும்.

ஜூலை 04  மற்றும் 9 ஆம் திகதிகளில் டகோவின் சித்திரக் கண்காட்சிகளை பார்த்து மகிழலாம். இதேநேரம் அவர் தனது சுவரோவியம் மற்றும் இளையோருக்கான பயிற்சிப்பட்டறைகளை கண்டியில் முன்னெடுக்கவுள்ளார்.

மெரி கரோலின் சென்லிஸ் இன் புகைப்பட மற்றும் சிற்பக் கண்காட்சி எதிர்வரும் ஜூன் 07 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கொழும்பு மஜிஸ்டிக் சிட்டியில் ஜூலை மாதம் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை Django  என்ற திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

இதேவேளை, ஜூலை 10 ஆம் திகதி நவநாகரீகக் கண்காட்சியொன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

ஜூன் 16 ஆம் மற்றும் 19  ஆம் திகதிகளில் பிரெஞ்சு நகைச் சுவை சித்திரம் மற்றும் இலக்கியம் ஆகியவவை தொடர்பில் அறிந்துகொள்ள முடியும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களைமுகப்புத்தகத்தில் French Spring Festival என்ற பக்கத்தின் ஊடாகவும் டுவிட்டர் தளத்தில்  Frenchspringfestival ஊடகாவும் அறிந்துகொள்ள முடியும். இவற்றைவிட https://lk.ambafrance.org அல்லது www.alliancefrancaise.lk ஆகிய இணையத்தளங்களிலும் பார்வையிட முடியும்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.