(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருந்து சிங்கம் போன்று வெளிவந்ததாக குறிப்பிட்டுள்ளமை வேடிக்கையாகவுள்ளது. 2015ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது வேட்பாளராக  கட்சி க்கு துரோகம் செய்தே போட்டியிட்டார் என தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேக.

நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தினை தான்  தயாரிக்கவில்லை என்று தற்போது பிறர் மீது பழிசுமத்தி மக்களின் ஆதரவினை பெறும் நோக்கில் அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார் என குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்கள் விடுதலை முன்னணியினர் 20ஆவது அரசியல் திருத்தத்தினை தனிப்பட்ட  முறையில்  சமர்ப்பிக்கவில்லை. இந்த சூழ்ச்சியில் பின்னிலையில் முக்கிய சில தரப்பினர்கள் காணப்படுகின்றனர். நிறைவேறறு அதிகாரம்  கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்தால் அது பிரதமருக்கே சாதகமாக அமையும் .

ஆகவே பிரதமர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரது நோக்கங்களை  நிறைவேற்றும் நோக்கிலே மக்கள் விடுதலை முன்னணியினர் 20ஆவது அரசியல் திருத்தத்தினை  சமர்ப்பித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பு மற்றும். அரசியல் தீர்வு  ஆகிய இரண்டு விடயங்களையும் மையப்படுத்தியதாகவே காணப்படுகின்றது.

தேசிய அரசாங்கமும் இதுவரை காலமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில கோரிக்கைகளை மறைமுகமாக நிறைவேற்றியுள்ளது. 20ஆவது திருத்தத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய வேண்டும  என்ற விடயத்தினை மாத்திரம் முன்னிலைப்படுத்தி பல விடயங்கள் மறைமுகமாக நிறைவேற்றிக் கொள்ளவுள்ளது. நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பு தொடர்பில் மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

20ஆவது திருத்தம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை மாத்திரம் இரத்து செய்ய முன்வைக்கபடவில்லை . முழுமையாகவே ஜனாதிபதி தேர்தல் முறைமையினையும் இரத்து செய்யப்பட  வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியலமைப்பின்  4ஆம் அத்தியாயத்தின் (ஆ) பிரிவின் பிரகாரம் நாட்டு தலைவர் மக்களின் முழுமையான ஆதரவினை பெற்றவராக காணப்பட வேண்டும். அவரே  நாட்டு தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வனச வாக்குரிமையின் ஊடாக மக்களின் ஜனநாயக உரிமையினை உறுதிப்படுத்தும் நோக்கிலே இந்த வழிமுறை  உருவாக்கப்பட்டது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணியினர் மக்களின் ஜனநாயக  உரிமைகளுக்கு  பாதிப்பு ஏற்படுத்தும்  உபாயங்களை தற்போது  முன்னிலைப்படுத்தியுள்ளது.

மக்கள் நேரடியாக ஜனாதிபதியை தெரிவு செய்யாமல்  பாராளுமன்றத்தின் பெரும்பாண்மை உறுப்பினர்களின் ஆதரவுடன்  நாட்டு தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று  20ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் பலம் பெற்றவராக பிரதமரே காணப்படுகின்றார். பிரதமர் தனிப்பட்ட முறையில் தான் விரும்பிய நபரை ஜனாதிபதியாக தெரிவு செய்யலாம் .  அதாவது முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர்  அர்ஜுன  மகேந்திரனை போன்று பிற  நாட்டு பிரஜைகளை நமது நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யும் சாத்தியக் கூறுகள் 20ஆவது திருத்தத்தில் காணப்படுகின்றது.

மக்களாட்சி கோட்பாடு வழுப்பெற வேண்டும் என்ற நோக்கத்திலே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை காலமும்   நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் ஊடாக எவ்வித பிரச்சினைகளும் தோற்றம் பெறவில்லை.

ஆகவே மக்கள் விடுதலை முன்னணி சிலரது  சுய விருப்பங்களை  நிறைவேற்றும் நோக்கிலே 20ஆவது திருத்தத்தினை தாக்கல் செய்துள்ளனர் நாட்டு மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி  எதிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.