(எம்.சி.நஜிமுதீன்)

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பணம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. எனவே அக்குற்றச்சாட்டிலிருந்து அவரால் விடுபடமுடியாது என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பொரளை என்.என்.பெரோ நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோசடியுடன் தொடர்புபட்டவர்களால் ஆடை அணிந்துகொண்டு இருக்க முடியாதென கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்து வந்தார். மேலும் சில சந்தர்ப்பங்களில் கூட்டு எதிர்க்கட்சியினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

ஆனால் திருட்டுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து தயாசிறி ஜயசேகர பணம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி மோசடி இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுன்ற உறுப்பினர்களால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் அது குறித்து கோப் குழுவிற்கும் தெரியப்படுத்தப்பட்டது. 

எனவே தான் அறியாது நிதி பெற்றதாக அவரால் குறிப்பிட்டு அக்குற்றச்சாட்டிலிருந்து விடுபடமுடியாது. எனினும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் 54 உறுப்பினர்களில் எவரும் பேபச்சுவல்ஸ் டஷரிஸ் நிறுவனத்திடமிருந்து பணம் பெறவில்லை. பணம் பெற்றிருப்பின் தற்போதைக்கு அவர்களுக்கு தண்டனை வழங்கியிருப்பர்.

மேலும் தற்போது அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு உலக சுகாதார அமைப்பின் உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.  அவர் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் தேவைகளுக்காக, இராணுவத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டமைக்காகவா இப்பதவி வழங்கப்பட்டுள்ளத என்ற சந்தேகமும் எமக்கு உள்ளது என்றார்.