இலங்கையில் இருந்து எதிர்காலத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா செல்வதற்காக வீசா விண்ணப்பிப்போர் 3 நாட்களில் சுற்றுலா வீசாவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் தெரிவித்தார்.

பிரான்ஸ் நாட்டின் கலாசாரம் மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரெஞ் வசந்த காலத்தின் 7 ஆவது நிகழ்வு (French Spring Festival) கொழும்பு மற்றும் கண்டியில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி முதல் ஜூலை 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதரகம் மற்றும் அலியன்ஸ் பிரான்ஸிஸ் கோட்டே ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரெஞ் வசந்தகாலத்தின் 7 ஆவது நிகழ்வில்  நாம் பெருமளவில் இளையோரின் வருகையை எதிர்பார்க்கின்றோம். அத்துடன் இந்த நிகழ்வு வெற்றிகரமாக அமைய பங்களித்த அனைத்து பங்காளர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எதிர்காலத்தில் இலங்கையில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா செல்வதற்கு சுற்றுலா வீசா விண்ணப்பிப்போர்  3 நாட்களில் வீசாவினைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

இலங்கையின் உள்நாட்டுப்போரின் பின்னர் இருநாட்டு பரஸ்பர சுற்றுலா பயணிகளின் வருகைகள் அதிகரித்துள்ளன.

கடந்த வருடம் 94 ஆயிரம் பிரான்ஸ் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். இது கடந்த ஆண்டு இலங்கைக்கு வருகைதந்த மொத்த சுற்றுலாப் பயணிகளில் 12 வீதம் ஆகும்.

போருக்குப் பின்னரான காலத்தில் பிரான்ஸில் இருந்து 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் சுமார் 30 ஆயிரம் பிரான்ஸ் சுற்றுலாப்பயணிகளே இலங்கைக்கு வந்தனர்.

போர் நிறைவடைந்த பின்னர் அது தற்போது மும்மடங்காக அதிகரித்துள்ளது. போர் நிலவிய காலப்பகுதியில் இலங்கையில் இருந்து 3 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸிற்கு சென்றனர். 

இந்நிலையில் கடந்தவருடத்தில் மாத்திரம் 10 ஆயிரம் இலங்கை சுற்றுலாப்பயணிகள் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.