(இரோஷா வேலு) 

25 வருடங்களாக இலங்கை சுங்கத்தினால் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்துக் கோடிக்கும் அதிகமான பெறுமதிவாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் என்பன பொதுநலன் கருதி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. 

தெமட்டகொடையில் அமைந்துள்ள இலங்கை சுங்கத்துக்கு சொந்தமான சிலோன் சிப்பிங் லைன்ஸ் கொள்கலன் தரிப்பு நிலையத்திலேயே இந்நிகழ்வு  இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சுங்க திணைக்கள பணிப்பாளர்நாயகம் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் தொழில் பயிற்சி அமைச்சகத்தின் கல்லூரிகளுக்கும் வேறு சில தொழில்பயிற்சி கல்லூரிகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டது. 

இதன்போது, 5 கோடிக்கும் அதிகமான பெறுமதி வாய்ந்த 94 முழுமையான மோட்டார் சைக்கிள்கள், 145 பகுதியளவிலான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் மூன்றும் மொத்தமாக 250க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் கையளிக்கப்பட்டன. 

இதன்போதும் 42 தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு 19 பாடத்திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடியவையாக காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது. 

மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் பாடசாலைக் கல்வியின் பின்னர் 20 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்நுழைகின்றனர். மிகுதி 80 வீதமான மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தி கொள்கின்றனர். ஆனாலும் அவர்களில் சில மாணவர்கள் தொழில்நுட்ப கல்வியை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

ஆயினும், பல தொழில் நுட்ப கல்லூரிகளில் அதற்குரிய உபகரணங்கள் மற்றும் வசதிகள் காணப்படுவதில்லை.

ஆகவே தான் இவற்றை கவனத்தில் கொண்ட சுங்க திணைக்களம் சட்டவிதி முறைகளுக்குள்ளடங்களாக, இவ்வாறு சட்டவிரோதமான வகையில் கொண்டுவரப்பட்டு சுங்கத்தால் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படுகின்றது. 

குறித்த செயற்பாட்டினால் 1000 அதிகமான மாணவர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பயன்பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.