இஸ்ரேல் இராணுவத்தை குறி வைத்து பாலஸ்தீன் தீவிரவாதிகள் நடத்திய பீரங்கித் தாக்குதலுக்கு பதிலடிக்கு கொடுக்கும் வகையில் பாலஸ்தீனின் 25 க்கும் மேற்பட்ட தீவிரவாத நிலைகள் மீது  இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

அந்த வகையில் கடந்த 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இஸ்ரேலின் தெற்குப் பகுதியை  குறிவைத்து சுமார் 25 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன. இதில் பெரும்பாலான குண்டுகளை இஸ்ரேல் இராணுவம் இடைமறித்து அழித்தது. சில குண்டுகள் இஸ்ரேல் பகுதிக்குள் விழுந்து வெடித்தன.

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் 25 க்கும் மேற்பட்ட தீவிரவாத நிலைகளை குறிவைத்து  இஸ்ரேல் இராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் உயிரிழப்பு, காயமடைந்தோர் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அமெரிக்கா அண்மையில் அந் நகரில் தனது தூதரகத்தை திறந்து வைத்தது. ஜெருசலேம் நகரை சொந்தம் கொண்டாடும் பாலஸ்தீனர்கள் இதை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த மார்ச் 30 முதல் இதுவரை 121 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.