கல்குடாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்

இன்று காலை பொலிஸாரால் நீதிமன்றுக்கு சமர்பிக்கப் பட்ட குற்ற பத்திரிக்கை நீதிபதியினால் வாசிக்கப் பட்ட போது குற்றப்பத்திரிக்கையில் "வேண்டும் என்றும் தாக்குதல் நடத்தும் நோக்குடனும் "என்ற வசனம் இந்த வழகிற்கு பொருந்தாது என்றும்  முன்னுக்கும் பின் முரணாக உள்ளத்தால் அதை சரியான சட்டக் கோவைக்கு இணங்க சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்,

கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய செய்தியாளர்களான, புண்ணியமூர்த்தி சசிகரன் நல்லதம்பி நித்தியானந்தன் ஆகியோர் செய்தி சேகரிக்கச் சென்ற போது மதுபானசாலை உற்பத்தி நிலையத்திலுள்ள சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

மதுபானசாலை உற்பத்திச் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்ற இடத்திலிருந்து சிலர் ஊடகவியலாளர்களைத் தாக்கியுள்ளதுடன், சுமார் 6 கிலோமீற்றர் வரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.