இலங்கையில் மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையின் காரணமாக வருடாந்தம் 15 ஆயிரம் பேர் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 முதன்முதலில் புகையிலை எதிர்ப்பு தினம் ஏப்ரல் 7ஆம் திகதி, 1988ஆம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனத்தின் 40ஆவது ஆண்டு விழாவின் போது கடைபிடிக்கப்பட்டது. பின்னர், ஆண்டுதோறும் மே 31ஆம் திகதி புகையிலை எதிர்ப்பு தினமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

குறித்த தினத்தில் நிகழ்ச்சிகளும், வலியுறுத்தல்களும், மக்களை புகையிலைப் பயன்பாட்டைக் குறைக்கவோ, அல்லது முற்றிலுமாக விட்டுவிடவோ, ஊக்குவிக்கும் வகையில் அமைகிறது.

 புகையிலை சிகரெட், பீடி, குட்கா, மூக்குப்பொடி, போன்றப் பல வகைகளில் உட்கொள்ளப்படுகிறது.   

மாரடைப்பு, பக்கவாதம், இதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய், நாட்பட்ட இருமல் மற்றும் பல ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படுவதற்கு காரணமாக புகையிலை உட்கொள்ளுதல் அமைகிறது.

புகையிலைப் பழக்கத்திலிருப்பவர்களை சிறந்த முறையில் மீட்டு, புகையிலைக்கு எதிரானப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகிறது.

புகையிலை பாவனையிலிருந்து இதயத்தை பாதுகாக்க, இதயபூர்வமாக செயற்படுவோம் என்ற தொனிப்பொருளில் இந்த வருடத்துக்கான புகையிலை எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

 புகையிலை உற்பத்திப் பொருட்களை பாவிப்பதன் மூலம், மனிதனது ஆயுட்காலம் 10 ஆண்டுகளால் குறைவடைவதாக உலக சுகாதார ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது.

 அத்துடன் இதன் காரணமாக வருடாந்தம் உலகம் முழுவுதும் 7 மில்லியன் பேர் மரணிக்கின்றனர்.

 2030ஆம் ஆண்டாகும் போது இந்த மரண வீதம் 8 மில்லியனாக அதிகரிக்கவுள்ளது.