(இரோஷா வேலு)

இலங்கையைப் பின்பற்றி தமிழ் மக்களை ஒடுக்கும் செயலில் இந்தியா ஈடுபடக்கூடாது. தூத்துக்குடி விவகாரம் சட்ட விதிமுறைகளை மீறிய செயலாகும்  என அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். 

தூத்துக்குடி சம்பவம் தொடர்பில் தமது எதிர்ப்பையும், அங்கு பொலிஸாரால் தாக்கப்பட்ட மக்களுக்கு தமது ஆதரவையும் தெரிவிக்கும் முகமாக இன்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் முன்பாக சமூக நீதிக்கான வேஜின் அமைப்பினால் அமைதி முறையிலான எதிர்ப்பு போராட்டமொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. 

இதன்போது, ”ஸ்டெர்லைட் ஆலை மன்னார் வளைகுடாவுக்கும் ஆபத்தை உண்டாக்கும், ரதுபஸ்வல முதல் தூத்துக்குடி வரை எதிர்த்து நிற்போம் பி.ஜே.பி. வேதாந்தாவின் கைக்கூலி” போன்ற வசனங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இவர்களின் போராட்டத்தின் போது இந்திய உயர்ஸ்தானிகருக்கு இச்சம்பவம் குறித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக மனுவொன்றையும் கையளிக்க முனைந்தனர். ஆயினும், அதன் போது அங்கு உயர் அதிகாரிகளும் எவரும் காணப்படாத நிலையில் அவர்களை பிரநிதித்துவப்படுத்தும் அதிகாரியொருவர் இம்மனுவை ஏற்றுக்கொண்டார்.