கிரிக்கெட் விளையாட்டுகளில் தொடர்ந்து பாரிய மோசடிகள் இடம் பெற்று வருகின்றது என்று பலமுறை அரசாங்கத்திடம்  குறிப்பிட்டும் அரசாங்கம் எவ்வித தீர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை அதன் பெறுபேறுகள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது." என பெற்றோலிய வளத்துறை  அமைச்சர் அர்ஜுன ரனதுங்க தெரிவித்தார்.

பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அர்ஜுன ரனதுங்க தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

"ஆட்ட நிர்ணய சதிகளுக்கு அரசாங்கமே முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டும். 2015ஆம் ஆண்டிற்கு பிறகு விளையாட்டுத்துறை குறிப்பாக கிரிக்கெட் துறையில் பாரிய மோசடிகள் ஏற்படுவதற்கு  கிரிக்கெட் சபையின் முறையற்ற நிர்வாகமே காரணம். இன்று இலங்கை கிரிக்கெட் சர்வேதேசத்தில் அபகீர்த்தியினை அடைந்துள்ளது. 

ஆட்ட நிர்ணய  விவகாரத்தில் மோசடி இடம் பெற்றுள்ளதாக  அல்ஜசீரா தொலைக்காட்சி ஆவணப்படம் கருத்து வெளியிட்டதை தொடர்ந்து தற்போது இவ்விடயத்தில் தொடர்புப்பட்டவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு விசாரனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். குற்றங்களுக்கான  வழிமுறைகளை உருவாக்கி கொடுத்த முக்கிய தரப்பிணர்கள் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளனர். 

2015ஆம் ஆண்டுவரையில் விளையாட்டுத்துறை  சகல துறைகளிலும் முன்னேற்றம்  அடைந்து வந்துள்ளது ஆட்சி மாற்றத்தின் பின்னர் திறமைகளை மையப்படுத்தி செயற்படும் விளையாட்டுத்துறையில் அரசியல் தலையீடுகள் மிதமிஞ்சியதாக காணப்பட்டது. தகுதிகளை கருத்திற் கொண்டு கிரிக்கெட் சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படாமல், அரசியல் சிபாரிசுகளின் மூலம் உறுப்பினர்கள்  முக்கிய பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்டமையே இன்று கிரிக்கெட் துறையின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக காணப்படுகின்றது. இதற்கு தேசிய அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.

நாட்டின்  முக்கிய  விளையாட்டுத்துறையான கிரிக்கெட் சபை தேசிய அரசாங்கத்தில் இலாபம் பெறும் ஒரு நிறுவனமாக மாற்றியமைக்கப்பட்டது.  அரசாங்கம் சர்வதேச போட்டிகளை மையப்படுத்தி நாட்டுக்கு  கிடைக்கப் பெறும் அதிக வருமானங்களை மாத்திரமே கருத்திற் கொண்டு செயற்பட்டது. கிரிக்கெட் அணியினரது தேவைகள் மற்றும், கிரிக்கெட் விளையாட்டின் மேம்பாடு, அபிவிருத்தி தொடர்பில் எவ்வித அக்கறைகளையும் மேற்கொள்ளவில்லை.  முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் முறையற்ற  நிர்வாகத்தின் காரணமாகவே தற்போது கிரிக்கெட் சபை அனைவரது ஏளனத்திற்கும் உட்பட்ட தாபனமாக காணப்படுகின்றது. 

கடந்த மூன்று வருடகாலமாக கிரிக்கெட் விளையாட்டுக்களின் போட்டிகள் கிரிக்கெட் சட்டங்களுக்கு புறம்பாகவே இடம் பெறுகின்றது. சில மோசடிகார வியாபாரிகளின் சூதாட்டங்களின் விருப்பங்களுக்கு அமையவே  விளையாட்டு போட்டிகள் இடம் பெறுகின்றது . தற்போது பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படும்  வீதம் குறைவாகவே காணப்படுகின்றது. பாடசாலை கிரிக்கெட் அணிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மந்தகரமாகவே  செயற்படுத்தி வருகின்றது . இதன் காரணமாக  மாணவர்களின் விளையாட்டு திறமைகள்  தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.

தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தனது அமைச்சு பதவியின் அதகாரங்களை பயன்படுத்தி இடம் பெற்றுள்ள மற்றும் இடம் பெற்று வருகின்ற மோசடிகளை ஆராய வேண்டும். விரைவில் இவ்விடயத்துடன் தொடர்புப்பட்டவர்களை சட்டத்தின் முன்னிலைப்படுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்." என தெரிவித்தார்.