இலங்கையில் சிறுபான்மை மதப்பிரிவினர் மீது தொடர்ந்தும் தாக்குதல்கள் இடம்பெறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2017 இல் உலகநாடுகளில் காணப்பட்ட மதசுதந்திரம் குறித்த அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் மீது வருடாந்த அறிக்கையிலேயே இந்த குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் தேசிய கிறிஸ்தவ எவாஞ்செலிகள்  என்ற அமைப்பு கடந்த வருடம் 97 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக பதிவு செய்துள்ளது என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

கிறிஸ்தவ மதகுருமார் மீதான தாக்குதல்களும் தேவாலயங்கள் மீதான தாக்குதல்களும் இடம்பெற்றதாகவும் மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் காணப்பட்டதாகவும் அமெரிக்கா குறிப்பிட்ட அமைப்பை மேற்கோள்காட்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் கடந்த வருடம் முஸ்லிம்களின் பள்ளிவாயில்கள் மற்றும் தொழுகை அறைகளில் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது எனவும் அமெரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக ரமழான் மாதத்தில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுபலசேனா போன்ற பௌத்த அமைப்புகள் தொடர்ந்தும் பௌத்த சிங்களவர்களின் மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றன, என தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்த அமைப்புகள் ஏனைய சிறுபான்மை மத இனப்பிரிவினரை சிறுமைப்படுத்த  முயல்கின்றன இதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றன எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பொதுபலசேனவும் ஏனைய தேசிய குழுக்களும் சிறுபான்மை மத குழுக்களிற்கு எதிராக வன்முறைகளை தூண்டும் விதத்திலான கருத்துக்களை பரப்பி வருவது குறித்து சிவில் சமூக அமைப்புகள்  கவலை வெளியிட்டுள்ளன எனவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.