(ரொபட் அன்டனி)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்து தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் எதிர் கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பில் பிரபா கணேசன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் பா.உதயராசா, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன, ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது எதிர்கால அரசியல் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக பயணிப்பது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

அத்துடன் அரசியலமைப்பு உருவாக்கல் விவகாரம் மக்கள் விடுதலை முன்னணியின் 20 ஆவது திருத்தச் சட்டம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.  

அதுமட்டுமின்றி விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஒரு சில மாகாண சபைகளுக்கான தேர்தல் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.