அந்தமான் தீவில் அமைந்துள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை பலியாகியுள்ளதோடு மேலும் 39 சுற்றுலாப் பயணிகள் எரி காயங்களக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியான அந்தமான் - போர்ட் பிளேட் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள "நோர்த் ரீப்" நட்சத்திர விடுதியில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென தீ பரவியுள்ளது.

விடுதியின் களஞ்சிய அறையில் பற்றிய தீ சிறிது நேரத்திற்குள் விடுதியின் எல்லாப் பகுதிகளுக்குள்ளும் பரவியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இருப்பினும் குறித்த விபத்தில் 3 வயதான குழந்தை ஒன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததோடு விடுதியில் தங்கியிருந்த 39 சுற்றுலாப்பயணிகள் தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 39 பேரில் எழுவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்களுக்கு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.