(ஆர்.யசி)

வடக்கில் தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, வடக்கின் அபிவிருத்திகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்  இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவரை சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.இதன்போதே வடக்கின் காணி விடுவிப்பு மற்றும் அபிவிருத்திகள் முன்னெடுப்பு குறித்து பிரதமர் தமிழ்த் தரப்புக்கு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். 

இந் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்டம் எவ்வாறு இருக்கும் என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும்  தெரிவிக்கையில்,

வடக்கில் இன்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளது. அதேபோல் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றை அபிவிருத்தி செய்ய இந்தியாவின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டபோதிலும் இன்றும் கடற்படை மற்றும் விமானப் படை வசமே அந்தக் காணிகள் உள்ளன.

ஆகவே வடக்கின் அபிவிருத்தி, காணிவிடுவிப்பு, அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பு குறித்து பிரதமர் எமக்கு வழங்கிய வார்த்தைகள் வெறும் வாய் வார்த்தைகளாக அமைந்துவிடக் கூடாது எமது மக்களை பாதுகாக்கும் மக்களின் வாழ்க்கையை பலப்படுத்தும் வாக்குறுதிகளாக அமைய வேண்டும்.

அதேபால் வாக்குறுதிகளை நாம்பி நாம் அமைதியாக இருக்கப் போவதுமில்லை தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து எமது மக்களின் நலன்களை வெற்றி கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படும் என்றார்.