இலங்கை அரசாங்கம் மலேசியாவின் மஹாதீர் முகமட் அரசாங்கம் போன்று  செயற்படவேண்டும் என ஸ்ரீலங்கா  சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மலேசிய அரசாங்கம் போன்று செயற்பட்டிருந்தால்  முன்னைய அரசாங்கத்தின் கீழ் ஊழலில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவின் முன்னைய அரசாங்கத்தின் ஊழல் சக்திகளை தண்டிக்குமாறு அந்த நாட்டு மக்கள் பிரதமர் மஹாதீரை கேட்டுக்கொண்டனர், அதன்படி அவர் பதவியேற்ற பின்னர் நடவடிக்கை எடுத்துள்ளார், ஊழலில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள்  அதிகாரிகளை கைதுசெய்துள்ளார் எனவும் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையின் விசாரணையாளர்கள் அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்;களிற்கு  எதிராக நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய குற்றங்களில் ஈடுபட்ட சாதாரண பொதுமக்கள் விடயத்தில் இலங்கை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கின்றனர்,சட்டத்தை அனைத்து மக்களிற்கும் ஒரேமாதிரியான விதத்தில் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.