தமிழகத்தில் தங்கியுள்ள ஈழ ஏதிலியர்கள் நாடு திரும்பல், கடந்தகால சமகால சவால்கள், அரசியல் நிலைமைகள் குறித்து தந்தை செல்வாவின் புதல்வரும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்களத்தின் நிறுவுனரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சா.செ.சந்திரகாசன் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- அசாதாரண நிலைமைகளின் போது வருகைதந்த ஈழ ஏதிலியர்கள் தற்போது நாடு திரும்புவது குறித்து எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளார்கள்?

பதில்:- இந்த வினாவுக்கு நான் அளிக்கும் பதில் பலருக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கும். அதற்கு நியாயங்கள் பலவுள்ளன. அவ்வாறிருக்கையில், நூற்றியொரு சதவீத மக்கள் நாடு திரும்புவார்கள். நூற்றியொரு சதவீதம் எனக்கூறும்போது, இலங்கை ஏதிலியர்களைத் தாண்டி இந்தியர்களை மணமுடித்து குடும்பவாழ்க்கையில் உள்ளவர்கள் கூட திரும்புவார்கள்.

இலங்கையில் வசதி வாய்ப்புக்கள் அளபரியதாக உள்ளன. இருப்பினும் கலவரங்கள், இனப்படுகொலைகள் தான் மிகப்பெரும் இடராக இருந்து கொண்டிந்தன. அவை தற்போது நிறைவுக்கு வந்துவிட்டன. 2010ஆம் ஆண்டு முதல் நான் இலங்கைக்கு சென்றுவர ஆரம்பித்துள்ளேன்.

இச்சமயத்தில் பலதரப்பட்ட தரப்பினர்களையும் சந்தித்து வருகின்றேன். கடந்தகால அசாதாரண நிலைமைகளால் அனைத்து தரப்பினருமே கஷ்டங்களுக்கு முகங்கொடுத்துள்ளர்கள். ஆகவே பகிரங்கமாக கூறாது விட்டாலும் “போதும் இனி வேறுவழியில்” செல்வோம் என்ற மனநிலைதான் அனைவரிடத்திலும் காணப்படுகின்றது.

அனுவங்களை அசைபோட்டு மக்கள் எடுக்கும் முடிவுகள் மிகப்பெரும்பாலான தருணங்களில் அது சரியானதாகவே இருக்கும். அவ்வாறிருக்கையில் வன்முறையை தவிர்த்துக்கொள்ளும் முயற்சிகளில் சுயகட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. ஒருசில தலைமைகள் அந்த சுயகட்டுப்பாட்டினை மீறி குழப்புவதற்கு முயற்சிகளை எடுத்தாலும் மக்கள் மத்தியில் தெளிவான நிலைமைகள் உள்ளன.

தமிழகத்தில் ஆட்சிமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு காணப்படுவதாலும் அரச உதவிகள் உள்ளிட்ட மேலதிக நன்மைகள் இந்த மக்களுக்கு இருக்கின்றபோதும் தமது சொந்த மண்ணில் வாய்ப்புக்கள் வானளவிற்கு இருக்கின்றன. காலக்கிரதமத்தில் இலங்கையிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டு அவை இலங்கைக்கும் நன்மையளிக்ககூடிய வாய்ப்பிருக்கின்றது. எனவே அத்தகைய நிலைமையில் மிகத்திரளானவர்கள் நாடுதிரும்புவார்கள். கற்பனை உலகத்தில் கருத்துரைக்கின்றோ இல்லை எதிர்காலத்தினை தீர்க்கதரிசனமாகச் சொல்கின்றேனா என்பதற்கு காலம் பதிலளிக்கும்.

நாம் பஞ்சத்து ஆண்டிகள். தேவையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதே எமது சேவை. ஆனால் பரம்பரை ஆண்டிகளும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு தரித்திரம் தொடர வேண்டும். அவ்வாறானவர்களே தவறான கருத்துக்களை பரப்புகின்றார்கள். அவ்வாறானவர்களிடத்தில் பணம் உள்ளிட்ட சர்வ வல்லமை இருந்தமையால் ஆரம்பத்தில் வலுவாக இருந்தார்கள். பின்னர் அவர்களையும் அவர்களின் கருத்துக்களையும் பற்றி மக்களே சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்று சிந்தனையின் பிரகாரம் நாம் செயற்பட்டோம்.

அதனடிப்படையில் நாடு திரும்பல் பற்றியும் முடிவெடுப்பதற்காக 2014 ஆம் ஆண்டில் 17 கலந்தாய்வுகளை நடத்தினோம். இதன் இறுதி நிகழ்வு சென்னையில் நடத்தப்பட்டபோது இரு தீவிரவாதக்குழுக்கள் அதனை குழப்புவதற்கு கூட முனைந்தார்கள். இருப்பினும் அந்த நிகழ்வில் மக்கள் வெளிப்படுத்திய உறவுரீதியான உணர்வுக்கு முன்னால் அவை வெற்றி பெறவில்லை. அந்த கலந்துரையாடலின் முடிவாக, நாட்டுக்குத் திருப்புவதே மிகச்சிறந்தது என்பதோடு அதற்கான கடமையும் அவர்களுக்கு உள்ளது என்பதேயாகும்.

இருப்பினும் இங்குள்ள மக்கள் மத்தியில் எந்த சூழ்நிலையில் நாம் வெளிவந்தோம் என்ற பயங்கரமான சூழல் தொடர்மான மனோநிலை தான் அவர்களின் மனதில் உள்ளது. அதனை திடீரென மாற்றிவிடமுடியாது. அவ்வாறு இறுகிப்போயிருக்கின்ற மனதினை மாற்றுவதற்கு படிப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது.

மேலும் புறப்படுகின்றோம் என்று கூறினால் உடனடியாக அனுப்பி வைத்து விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவும் இங்குள்ள மக்கள் மிகவும் அவதானமாகவே பதிலளிப்பார்கள். வீட்டுக்கு ஒருவன் போருக்கு வருமாறு கேட்டபோது வந்த மக்கள் இந்தநேரம் நாட்டுக்கு போகாது விட்டால் அதனைப்போன்றதொரு குற்றம் சரித்தில் இருக்க முடியாது.

கேள்வி:- 1983ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தங்கியிருக்கும் நீங்கள் தமிழக, மத்திய அரசுகளுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கின்றவர் என்ற அடிப்படையில் ஏதிலியர்களின் விடயத்தில் அத்தரப்புக்களின் கரினைப்போக்கு எவ்வாறு உள்ளது?

பதில்:- மாந்தநேய அனுகுமுறையிலும் அதுதொடர்பான போக்கிலும் நாம் எவ்விதமான குறைகளையும் அவர்களிடத்தில் கண்டிருக்கவில்லை. ஆனால் அரசியல் ரீதியான உரிமைகள் என்று வருகின்றபோது நடைமுறைப்படுத்துகின்ற பிரச்சினைகள் இருந்திருக்கின்றன.

இனப்பிரச்சினைக்கான தீர்வுரூபவ் போர் நிறுத்தம் இவ்வாறான சிக்கலான விடயங்களில் வெவ்வேறு அனுகுமுறைகள் இருந்திருக்கின்றன. அதுதொடர்பில் கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன.

ஆனால் இந்தியாவின் மாந்தநேய அனுகுமுறையில் எக்காலத்தில் எவற்றைச் செய்ய முடியுமோ அதனை மிகக்கூடியளவிற்கு செய்திருக்கின்றார்கள். எமது கோரிக்கைகள் மிதமிஞ்சிப்போகின்ற தருணத்திலே மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே தமிழக அரசு கூடிய கவனத்தினை எடுத்ததோடு மத்திய அரசும் ஆழமான உதவிகளை தொடர்ச்சியாக செய்தே வந்திருக்கின்றன.

ஏதிலியர்களாக தமிழகத்திற்கு வருகை தந்தவர்கள் ஆகக்குறைந்தது கற்றசமுகமாகவாவது நாடுதிரும்ப வேண்டும். ஆகவே இந்திய மாணவர்களின் சேர்க்கைக்குள் தலையீடு செய்யாதவாறு மேலதிகமாக இலங்கை மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று 1983 இல் விடுக்கப்பட்ட இக்கோரிக்கை 1984ஆம் ஆண்டு சர்வகட்சிக்குழு கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டு அரச ஆணையாக பிறப்பிக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகள் ஒரே தீர்மானத்தினை எடுத்திருந்தன. அதனால் ஏதிலியர்களாக இருந்தபோதும் நூற்றுக்கு நூறு சதவீதமானவர்கள் எழுத்தறிவுடையவர்களாக உருவாகியுள்ளார்கள். அதற்கு மாநில மத்திய அரசாங்கத்தின் ஆதரவே காரணமாக இருக்கின்றமைக்கு சிறந்த உதாரணமாக கூறமுடியும்.

கேள்வி:- ஏதிலியர்கள் விடயத்தில் மாநில மத்திய அரசாங்கத்தின் மானிதாபிமான செயற்பாடுகள் இவ்வாறு இருக்கின்றபோதும் யுத்தத்தின் இறுதி நாட்களில் அத்தரப்புக்களின் நிலைப்பாடுகள் எவ்வாறு இருந்தன? அச்சமயத்தில் தாங்கள் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டீர்கள்?

பதில்:- யுத்தம் தீவிரம் அடைந்த தருணத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்தார். அது மாநிலத்திலும் மத்தியிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. இதன்காரணமாக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக பயங்கரமான ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடாது என்பது முக்கியமானதாக காணப்பட்டது. இதன் அடிப்படையில் தான் கலைஞர் உண்ணாவிரதத்தினை கைவிட்டிருந்தார். ஆனால் இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டபோதும் அந்த முடிவுகளை மீறிச் செயற்பட்டடுவிட்டு உதவிக்கு வந்தவர்களை குற்றம் சுமத்தமுடியாது.

கேள்வி:- முன்னாள் பிரதமர் ரஜீவின் மரணத்தின் பின்னரான நிலைமைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- 1991 இல் ராஜீவின் படுகொலையானது நேரடியாக ஈழ ஏதிலியர்களை பாதித்திருந்தது. அதாவது இந்தப்படுகொலையின் பின்னர் தமிழகத்தில் தங்கியுள்ள ஈழ ஏதிலியர்களை திருப்பி இலங்கைக்கு அனுப்புமாறு அரச ஆணையொன்று பகிரங்கப்படுத்தப்பட்டது. அத்துடன் தமிழகத்திற்கு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். ராஜீவின் படுகொலையினை அடுத்து அவர் கடும் நிலைப்பாட்டினை எடுத்தார். இலங்கையர்கள் இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டார்களா? என்று மனநிலையில் இருந்தார்.

இக்காலப்பகுதியில் முகாம்களுக்குப் புகுந்து அங்குள்ள மக்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றினார்கள். 28 தொண்டு நிறுவனங்கள் ஈழ ஏதிலியர்களுக்காக செயற்பட்டுக்கொண்டிருந்தன. இச்சம்பவத்தினை அடுத்து 27 தொண்டு நிறுவனங்கள் உடனடியாக வெளியேறியிருந்தன. இதனால் தனித்தவொரு அமைப்பாக ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் மட்டுமே சவால்களுக்கு முகங்கொடுத்து ஒவ்வொரு கட்டமாக முன்னேற வேண்டியிருந்தது. மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காக அப்போது பிரமராக இருந்த நரசிம்மராவ் வரையில் செல்லவேண்டியிருந்தது.

கலாநிதி.சுப்பிரமணியன்சுவாமி விடுதலைப்புலிகள் விடயத்தில் எதிரான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தாலும் மனிதாபிமான விடயத்தில் ஆதரவானராக இருந்தார். அனைவருமே கைவிட்டிருந்த நிலையில் அவர் ஒருவரே எம்மை நரசிம்மராவிடத்தில் அழைத்துச் சென்றார். இருப்பினும் தன்னுடைய அளவில் எடுக்கப்பட்ட முடிவல்ல. உள்துறை அமைச்சரைச் சந்திக்குமாறு கோரினார். அப்போது உள்துறை அமைச்சர் சவானைச் சந்தித்தபோது உள்துறை பாதுகாப்பு சபையில் எடுக்கப்பட்ட முடிவு எனவும் அதற்கு எம்.எம்.ஜேகப்பே பொறுப்பு எனவும் கூறினார்.

இறுதியாக பாராளுமன்றதில் வைத்து எம்.எம்.ஜேகப்பினைச் சந்தித்தபோது, “உயிராபத்துக்காக இன்னொரு நாட்டிற்கு வருகை தந்திருக்கும் நீங்கள் அந்தநாட்டுத் தலைவரை கொலைசெய்து விட்டீர்கள் என்றால் உங்களை நாம் இங்கு வைத்திருக்க முடியாது” என்று நேரடியாகவே கூறிவிட்டார். அச்சமயத்தில், “போர் வேண்டாம் என்று ஒதுங்கி வந்து நெருக்கடியுடன் முகாமில் இருப்பவர்கள் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்வார்களா? இலங்கையின் மூன்றிலொரு பகுதியை தமது கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்கும் புலிகள் இவ்வாறு முகாம்களில் இங்கு வந்து தங்குவார்களா?” என அவரிடத்தில் பதில் கேள்வியைத் தொடத்தபோது நிலைமையை விளங்கிக்கொண்டார்.

அதன்பின்னர் உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு என்னை அழைத்துச்சென்றபோது நான் விளக்கமளித்தேன். எனினும் அந்தக் கூட்டத்தில் இருந்த ஜெயலலிதாரூபவ் இலங்கை அகதிகள் பிரச்சினையை தீர்ப்பதென்றால் அவர்கள் அனைவரையும் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதுடன், மீண்டும் வராதவாறு கடலோர காவற்படையினைக் கொண்டு தடுக்க வேண்டும் என்று கூறினார். அச்சமயத்தில் எம்.எம்.ஜேகப், ஏதிலியர்களாக வந்தவர்கள் எமது உயர்ந்த விருந்தினர்கள். நாங்கள் அவர்களுக்கு தங்குமிடம், உணவு, கல்வி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று வலிந்து பதிலளித்தார். அது தான் இந்தியாவின் நிலைப்பாடு. அதனையடுத்து குறித்த ஆணையும் மாற்றியமைக்கப்பட்டது.

தமிழகத்தில் ஜெயலலிதா இறுக்கமான மனநிலையில் இருந்தமையினால் அதனை மாற்றுவதும் சிரமாக இருந்தது. அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு கூட்டம் நடத்தி ஏழு பாட்டுக்களில் எமது மக்களின் பிரச்சினைகளை முன்வைத்தோம். அச்சமயத்தில் கலைஞர் அதனை ஏற்றுக்கொண்டதோடு தாம் ஆட்சிக்கு வந்தால் அதனை செய்வதாகவும் உறுதியளித்தார். அடுத்த தேர்தலில் கலைஞர் ஆட்சிக்கு வந்தார். அச்சமயத்தில் அவர் ஊடாக எமது மனுவைக்கொடுத்து மீண்டும் கல்வி உரிமையை மீட்டெடுத்தோம்.

கேள்வி:- தமிழர்களுக்காக தங்களின் தந்தை வகுத்த கொள்கைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதோடு தற்போதைய தலைமைகளின் நகர்வுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதில் மறுப்புக்கூறுவதற்கு இல்லை. ஆனால் ஒரு சங்கடமான சூழல் உள்ளது. ஏனென்றால்ரூபவ் நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய காலகட்டத்தில் பல சம்பவங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தாதிருக்கின்றன. ஆகவே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் காரியங்களை முன்னெடுப்பத்தில் தொடர்ந்தும் பலம் கூட வேண்டும். 

செயற்பாட்டுத்திறன் கூட வேண்டும். சந்தேகப்படுவதை நாங்கள் மாற்ற வேண்டும். புதிய யுகம் ஏற்பட்டுள்ளது. நல்லிணக்கம் என்பதற்கும் போராட்டத்திற்கும் இடையில் அடிப்படையிலேயே வித்தியாசமிருக்கின்றது. நல்லிணக்க காலம் என்றால் நல்லிணக்கத்தினை சிறப்பாகச் செய்தே வெற்றி காணவேண்டும். நல்லிணக்க சூழலில் முரண்பாடுகளை மனதில் வைத்துக்கொண்டு செயற்படுவதானது பயனுள்ள விளைவுகள் கிடைப்பதற்க வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கும்.

எனக்கு அரசியல் புரியாத வயதில் எனது தந்தையார் தமிழ் காங்கிரஸை விட்டு விலகி தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலையில் புத்திஜீவிகள் அனைவரையும் கூட்டி விடயங்களை ஆலோசனை செய்வார். அந்த கலந்துரையாடல்கள், ஆலோனைகள், முன்மொழிவுகளை மிகப்பெரும் பொக்கிஷமாகவே நான் எண்ணுகின்றேன். அவ்வாறான பின்னணில் தான் எனது தந்தை, வன்னியசிங்கம், நாகநாதன், அமிர்தலிங்கம் போன்றவர்கள் உருவானார்கள். அவ்வாறான சூழலில் உருவான அந்த அமைப்பினைப்பின் தற்போதைய சூழ்நிலை வித்தியாசமாக இருக்கின்றது.

போராளிகள் காலம் இருக்கின்றபோது போராளிகளுக்கு அனுசரணையாக இருந்து அந்த நிழலில் வந்தவர்கள் தற்போது உள்ளார்கள். அவர்கள் தங்களின் சிந்தனை முறைகளை மாற்றக்கொள்ள வேண்டும். போராடக்கூடடியவன் மரணித்து விட்டான். அதனை தொடரக்கூடிய வாய்ப்பு எமக்கு இல்லை. அதற்கான பலமும் எமக்கு இல்லை.ஆகவே பெரிய வார்த்தைப் பிரயோகங்களை வெளிப்படுத்துவதிலும் பார்க்க எமது நல்லிணக்க திறன்களை மேம்படுத்த வேண்டும்.

தந்தை செல்வாவின் செயற்பாடுகள் தியாக அடிப்படையில் உருவானவை. தற்போதைய காலகட்டத்தில் சலுகை அடிப்படையிலான இடப்பகிர்வுகள் நடக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. காரணம்ரூபவ் போராட்டம் நடைபெற்ற காரணத்தால் அக்காலப்பகுதியல் சாத்வீக போராட்டத்தினை முன்னெடுத்து உருவான தலைவர்கள் உருவாகயிருக்கவில்லை. அதனால் வெற்றிடங்கள் உள்ளன. அந்த வெற்றிடங்களை நிரப்புகின்றபோது சிரமங்கள் ஏற்படுகின்றன.

கேள்வி:- தந்தை செல்லாவினால் தமிழர்களுக்கான தீர்வாக முன்மொழியப்பட்ட சமஷ்டி கோரிக்கை குறித்த தங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தமிழர்களுக்கு சிறந்தது என்று சிந்தித்து அசைபோட்டு எடுக்கப்பட்ட ஒரு விடயமாகின்றது. அதனை எந்தவடிவத்தில் அமைப்பது என்பது தொடர்பில் சில மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான நாடுகளில் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தியிருக்கின்றார்கள். சமஷ்டியை வேறுபட்ட வடிவங்களில் அமைக்கலாம். சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கலாம். ஆனால் அடிப்படைக் கொள்கை முக்கியமானது. மத்தியில் ஒரு ஆட்சி, மாநிலத்தில் ஒரு ஆட்சி, இணைந்து செயற்படுகின்ற சூழல் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது.

மாநிலத்தில் உள்ளவர்கள் தங்களது சுயநிர்ணய உரிமையை பயன்படுத்தி தமக்கு தேவையானவற்றை செய்கின்ற உரிமை நிச்சயமாக இருக்க வேண்டும். சமஷ்டித் தத்துவத்தின் முக்கியமான இப்பண்பு இருக்க வேண்டும். சமஷ்டி குறித்து இலங்கையில் மறுபட்ட எண்ணக்கரு இருந்த நிலையில் அண்மையில் உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பினை வழங்கியுள்ளது. சிங்கள, தமிழ தீவிரவாதிகள் அதனை தவறான அர்த்தப்படுத்தி விட்டார்கள். சமஷ்டி என்பது கூட்டாட்சி. இம்முறைமையிலான அமைப்பே இலங்கை தேசிய பிரச்சினைக்கு மிகச்சிறந்த தீர்வு என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை.

கேள்வி:- சமஷ்டி தத்துவ ஆட்சி இறுதித்தீர்வாக அமையும் என்று கூறுகின்றபோது தமிழர்க தாயகங்களான வடக்கு கிழக்கு இணைப்பு பேசுபொருளாகின்றதல்லவா?

பதில்:- 1985 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்த்தன பதியூர்தீன் முஹமட் தலைமையிலான குழுவினரை சென்னைக்கு அனுப்பியிருந்தார். வடக்கு கிழக்கு சம்பந்தமாக ஈழத்தமிழர்கள் எடுக்கும் நிலைப்பாட்டினை மாற்றியமைக்கு கோருமாறு அந்தக்குழுவிடத்தில் ஜே.ஆர் பணிப்புரை விடுத்திருந்தார். பல்வேறு தரப்பில் கூட்டங்கள் நடைபெற்றன. அச்சமயத்தில் தங்கத்துரை தலைமையில் நாம் கூட்டத்தினை நடத்தியபோது முஸ்லிம் தலைவர்களையும் அழைத்திருந்தோம்.

அச்சமயத்தில் தங்கத்துரை அண்ணாவா, அவர் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என்று முஸ்லிம் தலைவர்கள் கூறினார்கள். அந்தளவிற்கு நம்பிக்கை இருந்த காலம். அப்போது வடக்கும் கிழக்கும் ஒருமாகாணமாக வருகின்றபோது முஸ்லிம்களுக்கு எவ்வாறான ஏற்பாடுகள் வழங்குவது என்பது குறித்து அச்சமயத்தில் கலந்துரையாடி ஏற்றுக்கொண்டு முஸ்லிம் தலைவர்கள் சென்றிருந்தர்கள்.

இந்த விடயம் பேசித்தீர்க்கக்கூடியதொன்றாகும். வடக்கு கிழக்கு மாகாணம் என்பது பிரித்தானியர்களின் திட்டமாகும். ஆகவே சமஷ்டி முறையில் தீர்ப்பதற்கு வடக்கு கிழக்கு இணைப்பு என்பது இடையூறு அல்ல. மோதித் தீர்க்கவேண்டியல்ல. பேசித்தீக்ககூடிய விடயம். 

கேள்வி:- மனிதாபிமான பணி என்பதற்கு அப்பால் தமிழ்த் தேசிய அரசியல் ரீதியாக தங்களின் செயற்பாடுகள் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கப்படுமா?

பதில்:- புலம்பெயர்ந்து சென்ற மக்கள் நாடுதிரும்ப வேண்டும். அதற்கு ஒரு உதாரணமாக இந்தியாவில் உள்ள அகதிகள் நாட்டிற்கு திரும்பு அணியமாகிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் நாடு திரும்பி மண்ணை காப்பாற்றி வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் வளர்ச்சியில் தங்களை பங்குதாரர்களாக மாற்றவேண்டும். அவ்வாறான ஒரு கடமைக்கு முன்னுரிமை அளிப்பதால் ஏனை விடயத்தனை முன்னிலைப்படுத்தாது கண்ணை மறைத்துக்கொண்டிருக்கின்றேன்.

கேள்வி:- அரசியல் செயற்பாடுகளில் ஒதுங்கியிருப்பதானது அகிம்சைவழி தலைமைத்து வெற்றிடத்திற்கு நீங்களே வழிகோலுவது போன்ற அமைகின்றதல்லவா?

பதில்:- அவ்வாறு நான் கருதவில்லை. காலத்திற்கு ஏற்றவாறு நபர்கள் உருவாகி எமது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது கூட முயற்சிகள் நடைபெற்றுகின்றன. எதிர்காலத்திலும் தலைவர்கள் உருவாகுவார்கள். ஆகவே காலம் பதில் சொல்கின்ற விடயத்தில் நான் பதிலளிக்க வேண்டியதில்லை. எவ்வாறாயினும் தற்போது மாந்தநேயப்பணி உள்ளது. இதில் 35வருடங்களாக உள்ளேன். ஒருவேளை நான் அரசியல் பணியில் வரவேண்டியேற்பட்டால் இந்தப்பணி முழுமையாக நிறைவு பெற்ற பின்னர் தான் அது சாத்தியமாகும். அதுகூட பழைய முறையிலான பிரவேசமாக அமையாது.

கேள்வி:- உங்களின் அரசியல் பிரவேசம் மீண்டும் ஏற்பட்டால் பழைய அரசியல் கட்சி ஊடாகவா அமையும்?

பதில்:- இதுவொரு விவாதமான வினாவும் விடயம் கூட. தமிழரசுக்கட்சியும்ரூபவ் காங்கிரஸ{ம் இணைந்தே தமிழர் விடுதலைக்கூட்டணி உருவாக்கப்பட்டது. இரண்டு அமைப்புக்களும் இணைந்த போது தமிழரசுக்கட்சி அங்கத்தவராக இருந்த நான் தமிழர் விடுதலைக்கூட்டணி அங்கத்தவராக மாறியிருந்தேன்.

அக்காலத்தில் நிதி திரட்டப்பட்டபோது ஆயுட்கால சந்தா கோரப்பட்டது. ஆயுட்கால சந்தாவை செலுத்தியதன் அடிப்படையில் நான் தற்போதும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆயுட்கால உறுப்பினர். 2012 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நின்றபோது தமிழர் விடுதலைக்கூட்டணி மாநாட்டுக்கு அழைத்தார்கள். எவ்வாறாயினும் நான் ஏற்றபணியொன்று உள்ளது. அதன் பிராகாரம் மண்ணைக் காத்துவிட்டு அடுத்தகட்டம் சிந்திக்கலாம்.

(நேர்கணால்:- ஆர்.ராம்)