ஆல் ஜசீராவின் வீடியோவில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுவது குறித்து கருத்து தெரிவித்த  இரு முன்னாள் வீரர்களும் பயிற்றுவிப்பாளர்களுமான இருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை அணிக்காக இரு ரி20 போட்டிகளில் விளையாடியவரும் இலங்கை மகளிர் அணிக்கு தலைமை தாங்கியவரும் மேல்மாகாண அணியின் பயிற்றுவிப்பாளருமாகவும் பணியாற்றுவருமான ஜீவந்த குலதுங்கவையும்,கம்பஹாவின் பயிற்றுவிப்பாளர் தரிந்து மென்டிசையும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை  இடைநிறுத்தியுள்ளது.

இருவரும் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்ட நபருடனும் அல்ஜசீரா செய்தியாளருடனும் உரையாடுவதை குறிப்பிட்ட வீடியோ காண்பித்துள்ளது.

ஆடுகள சதி குறித்த விசாரணையின் போது தரிந்து மென்டிஸ் காணப்படுகின்றார்.

இதேவேளை குலதுங்க ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடுவது குறித்து தெரிவிப்பதை அல்ஜசீராவின் வீடியோ காண்பித்துள்ளது.

கிரிக்கெட் விளையாடுவது எங்களிற்கு காலையில் பல்துலக்குவது போன்ற விடயம் என குறிப்பிட்டுள்ள அவர் உங்களின் திட்டத்தின் படி கிரிக்கெட் விளையாடுவதே இலகுவான விடயம் ஏனென்றால் எங்களிற்கு அழுத்தங்கள் எதுவும் இல்லை என குறிப்பிடுகின்றார்.

அல்ஜசீராவின் விவரணசித்திரம் மூலம் நாங்கள்  ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்களை அறிந்தவுடன் அவர்களை உடனடியாக இடைநிறுத்திவிட்டோம் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வீடியோவில் காணப்பட்ட மூன்றாவது வீரரான டில்கார லொக்குஹெட்டிகே தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பதாலும் அவர் பதவிகள் எதனையும் வகிக்காததாலும் அவரிற்கு எதிராக நடவடிக்கைகள் எதனையும் எடுக்க யுமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்